'கருணை கொலை செய்து விடுங்கள்' கவுரவ விரிவுரையாளர்கள் மனு

விழுப்புரம் : தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், கோரிக்கை நிறைவேறாததால், கருணை கொலை செய்து விடுங்கள் என, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் 7,000 கவுரவ விரிவுரையாளர்கள், 15 முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 340 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், மண்டல தலைவர் ஆரிமுத்து தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு, எங்களது 25 ஆண்டுகால கோரிக்கைகையில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கவுரவ விரிவுரையாளர்களை, நவீன கொத்தடிமைகளாக அரசும், உயர்கல்வித் துறையும் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகைளை, தேர்தல் நேரத்தில் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளிப்பதும், ஆட்சிக்கு வந்த பிறகு காற்றில் பறக்க விடுவதும் என 20 ஆண்டுகளாக எங்களை அவமதிக்கின்றனர்.

கருணாநிதி ஆட்சி கால வாக்குறுதியை கூட இன்னும் நிறைவேற்றவில்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல், மிகக் குறைந்த ஊதியத்தில் பணி செய்வது, அதுவும் 11 மாதம் மட்டுமே ஊதியம்தான் வழங்கப்படுகிறது.

பெரும்பாலானோர் காலம் கடந்த திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தின் அத்தியாவசிய தேவையை கூட நிறைவேற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு, ஐகோர்ட் தீர்ப்பின் படியும், அரசாணை 56ன் படியும், இரு கட்டமாக, கவுரவ விரிவுரையாளர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பணி நிரந்தரம் செய்யும் வரை, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லை யெனில் நடை பிணமாக இருக்கும் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement