உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்

24

சென்னை: அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, உயர்கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் தமிழகம் ஒளிவிளக்காக உயர்ந்து நிற்கிறது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 51.3 விழுக்காடாகும். இது தேசிய சராசரியை விட இருமடங்கு அதிகம். தேசிய கல்வி கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளோம். அதனை செயல்படுத்தினால், 2030ம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு என்ற இலக்கை தற்போதே நாம் தாண்டி விட்டோம்.

500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், 31 புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளது. என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில் முதல் 100 இடங்களில் 22 பல்கலை உடன் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தரமான கல்வியினால் நாட்டை வழிநடத்துகிறோம். இது போதும் என்று மனநிறைவு பெற்று விடக் கூடாது.

பெரிய கனவுகளை காணவும், புதுமைகளை உருவாக்கவும், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்யவும் தான் நாம் இங்கு கூடியுள்ளோம். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையும், நமது மாநில வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முக்கியமான காலகட்டத்தில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வருவது என்பது கல்வியாளர்களாகிய உங்களுக்கு தெரியும். இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக பல்கலை செயல்பட வேண்டும். சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வது, புதிய உலகத் தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாம் உருவாக்கும் மாற்றங்களின் பயன் மாணவ செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழக பல்கலைகளுக்கான எதிர்கால திட்டத்தை உருவாக்க, நாம் ஒன்று கூடியிருப்பது ஒரு தொடக்கம் தான். அடுத்த கட்ட ஆலோசனைகளை, நாட்டின் சிறந்த கல்வியாளர்கள், சிறந்த உயர்கல்வி ஆலோசகர்களுடன் மேற்கொள்ள இருக்கிறேன்.

உயர்கல்வி துறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து, புதிய துடிப்பான தமிழகத்தின் அடித்தளமாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால், நம் மாணவர்கள் பின்தங்கக் கூடும். தாமதம் இல்லாமல் உடனடியாக அதில் ஈடுபட்டு, நடவடிக்கை அமைய வேண்டும்.

நாம் வடிவமைக்க விரும்பும் எதிர்கால திட்டம் 3 தூண்களை அடிப்படையாகக் கொண்டது. பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை.

பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும். ஏ.ஐ., க்ரீன் எனர்ஜி, இன்டஸ்ட்ரி 4.0, இது எல்லாம் தான் பொருளாதாரங்களை தீர்மானிக்கிறது. பல்கலைகளும் வளரும் தேவைகளுக்கு ஏற்பட மாணவர்களை உருவாக்க வேண்டும். டேட்டா சயின்ஸ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மேம்பட்ட உற்பத்தி போன்ற புதிய துறைகளை பாடத்திட்டங்களில் இணைக்க வேண்டும்.

அடிப்படை கல்வியறிவை நவீன திறன்களுடன் இணைத்து மாணவர்கள் பட்டதாரிகள் மட்டுமல்லாமல், புதுமையை உருவாக்குபவர்களாக தயார் செய்ய வேண்டும். தொழில் துறையினருடன் இணைந்து உலகின் தேவைகளை பிரதிபலிக்கும் பாடப்பிரிவுகளை வடிவமைத்து, பல்துறை கற்றலை ஊக்கவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement