முதியவர் தீக்குளிக்க முயற்சி; எஸ்.பி., அலுவலகத்தில் பரபரப்பு

கடலுார்; கடலுார் எஸ்.பி.,அலுவலகம் முன்பு, முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் தாலுகா, வடக்கு வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி,58. இவர் கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனம் ஒன்று ஐந்து லட்ச ரூபய் பணம் கட்டினால், 25லட்ச ரூபாய் லோன் கொடுப்பதாக கூறியதன் பேரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐந்து லட்ச ரூபாயைக் கட்டினார்.

கட்டிய பணத்தில் ஒருலட்ச ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்ததாகவும், 25லட்ச ரூபாய் லோனும் பெற்றுத்தரவில்லை எனக்கூறி போலீசில் புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று மதியம் கடலுார் எஸ்.பி., அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement