தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது: தம்பிதுரை

37


சென்னை: ''வரும் 2026ம் ஆண்டு இ.பி.எஸ்., தனியாக தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது'' என அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை தெரிவித்துள்ளார்.




இது குறித்து, அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது தி.மு.க., கொள்கை. தற்போது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சரியான முடிவு எடுத்து இருக்கிறார். ஊழல் குறித்து அமித்ஷா சொல்லி இருக்கிறார். இது குறித்து ஏதும் வாய் திறக்காமல் தி.மு.க., இருக்கிறது.


தமிழக முதல்வர் தைரியம் இருந்தால், ஊழல் குறித்து பேசிய அமித்ஷா மீது வழக்கு தொடர தயாரா? இப்பொழுது இ.பி.எஸ்., சரியான கூட்டணி அமைத்து இருக்கிறார். கூட்டணி என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் கொள்கை கூட்டணியில் சிறப்பாக இருப்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை!



பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி குறித்து அறிவிக்கும் போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தம்பிதுரை அளித்த பதில்: ஒன்று சொல்கிறேன். கேளுங்கள். தமிழகத்தில் இதுவரை ஏதாவது கூட்டணி ஆட்சி அமைந்து இருக்கிறதா?



தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை. வரும் 2026ம் ஆண்டு இ.பி.எஸ்., தனியாக தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி என்பதற்கு இடமே கிடையாது.



தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி வந்தது கிடையாது. இனிமேல் வரப்போவதும் கிடையாது. கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்தில் திராவிட கட்சிகளில் இருந்தது கிடையாது. இருக்க போவதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement