கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!

8


ஒட்டாவா: கனடாவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இளம் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா , 21, சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த ஹர்சிம்ரத் ராதா என்ற பெண் கல்வி பயின்று வந்தார். இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் சவுத் பெண்ட் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார்.



அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சுக்கு காத்திருந்த இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.


இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூதரகம் வருத்தம்



''ஹாமில்டனில் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவாவின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மாணவியின் குடும்பத்தினர் உடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என்று டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

4 பேர் உயிரிழப்பு



கடந்த 4 மாதங்களில் கனடாவில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.



* டிசம்பர் 1ம் தேதி 2024ம் ஆண்டு, பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த 22 வயது முதுகலை மாணவர் குராசிஸ் சிங் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.


* பஞ்சாபைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவி ரித்திகா ராஜ்புத் மரம் விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


* டிசம்பர் 6ம் தேதி, எட்மண்டனில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஷன்தீப் சிங், ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


* இன்று (ஏப்ரல் 19) இளம் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா, 21, சுட்டுக்கொல்லப்பட்டார்.

Advertisement