போட்ஸ்வானாவில் இருந்து இந்தியா வரும் சிவிங்கிப்புலிகள்: மே மாதம் கொண்டுவர ஏற்பாடு

6

போபால்: தென்னாப்பிரிக்காவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக 4 சிவிங்கிப்புலிகள் மே மாதம் இந்தியா வந்து சேருகிறது.


2022ம் ஆண்டு செப்.17ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து 5 பெண் சிவிங்கிப்புலிகள், 3 ஆண் சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், 2023ம் ஆண்டு பிப்., மாதம் மேலும் 12 சிவிங்கிப்புலிகள் குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.


இந்த பூங்காவில் இந்தியாவில் பிறந்த 14 குட்டிகள் உள்பட 26 சிவிங்கிப்புலிகள் உள்ளன. இந் நிலையில் தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் இருந்து இரு கட்டங்களாக மொத்தம் 8 சிவிங்கிப்புலிகள் இந்தியா கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக 4 சிவிங்கிப்புலிகள் மே மாதம் இந்தியா வந்து சேர உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த விவரத்தை மத்திய பிரதேச அரசு அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டு இருக்கிறது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் இந்த விவரத்தை கூறி உள்ளனர்.

இது குறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;


தென்னாப்பிரிக்கா,போட்ஸ்வானா மற்றும் கென்யாவில் இருந்து அதிக சிவிங்கிப்புலிகளை இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2 கட்டங்களாக மொத்தம் 8 சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்படும்.


மே மாதம் 4 சிவிங்கிப்புலிகள் போட்ஸ்வானாவில் இருந்து கொண்டு வரப்படும். அதன் பின்னர் மேலும் 4 சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்படும். தற்போது இந்தியா, கென்யா இடையே ஒப்பந்தத்தில் ஒப்புதல் உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement