தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!

27


பந்தலுார்: நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவர் அறையில் புகுந்த கட்டு விரியன் பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனத்தில் விடுவித்தனர்.


நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது நெல்லியாளம் நகராட்சி. இதன் தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சிவகாமி இருக்கிறார். இன்று காலை தலைவர் அலுவலகம் வராத நிலையில், அவரது அறையில் ஏதோ சத்தம் கேட்டது.



அப்போது அங்கிருந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கட்டு விரியன் பாம்பு என்பதால் அருகே செல்ல பயந்து, உடனடியாக வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.


அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், பாம்பை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். இதையடுத்து நகராட்சி அலுவலகம் முழுவதும் துாய்மைப்பணி முழு வீச்சில் நடக்கிறது.


அனைத்து அறைகளிலும் தேவையற்ற பொருட்களை அகற்றும்படியும், குப்பை கூளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படியும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement