தங்கவயல் செக் போஸ்ட்!

கோல்டு சிட்டியின் நீதிமன்றம் அருகேயுள்ளது, உரிகம் மலையாளி மைதானம். இது பழமை வாய்ந்தது. இங்கு அடிக்கடி கால்பந்து போட்டி, பொது நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்துவது வழக்கம்.

இத்தகைய மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கருத்து. இரு கோல் போஸ்ட்கள் இருந்தன. அதில் ஒரு 'கோல் போஸ்ட்'டை காணவில்லை. இது பற்றி எந்த விபரமும் இல்லை. அப்படின்னா அது திருட்டு போனதா. கோல் போஸ்ட் இல்லாமல் சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட முடியாமல் கஷ்டப்படுறாங்க. விளையாட்டுத் துறை செயல் படுகிறதா, இல்லையா. முனிசி.,யாவது கவனிக்க வேணாமா.

கோல்டு மைனிங் கம்பெனிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 'காலி நிலம்' ரா.பேட்டை 4வது கிராசில் உள்ளது. அதை சுற்றி காம்பவுண்ட் அமைச்சிருந்தாங்க. இப்போ அந்த காம்பவுண்ட் கற்கள், ஒவ்வொன்றா காலியாகுது. மைனிங் மூடிய பின்னர், ஒவ்வொன்றா கொள்ளை போய்க்கொண்டிருக்கும் போது, இதை மட்டும் எப்படி விட்டு வச்சாங்களோ?

இந்த நிலத்தை தான், 40 ஆண்டுகளாக சுருட்ட பார்த்தாங்க. ரா.பேட்டையில் உள்ள, 'குடா' ஆபீஸ் பக்கத்தில் இருந்த மைனிங் கட்டடத்தையும், 'ஆட்டை' போட முயற்சிகள் நடந்தன. அந்த 100 ஆண்டுகளின் கட்டடம் சிதைந்து, விழுந்து தரைமட்டமானது. அதன் காம்பவுண்ட் சுவரும் விழுந்து வருகிறது. இதுவும் மாபியா கும்பல் கண் பார்வையில் படாமல் இருப்பதும், இன்னும் இதன் பேரில் போலி பட்டா தயார் செய்யாமல் விட்டு வெச்சிருப்பதும் மகா அதிசயம் என்கிறாங்க உள்ளூர்காரங்க.

புதிய எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையில், கோல்டு சிட்டியை ஒட்டி, ஒரு வழித்தடம் அமைச்சிருக்காங்க. இதனால் இங்கு நிலத்தின் விலை ஒவ்வொரு அங்குலமும் கோல்டு போல, கேபிட்டல் சிட்டி ரேஞ்சுக்கு உயர்த்திட்டாங்க. இங்குள்ள அரசு நிலம் எங்கும் எதுவும் காலி இல்லையாம். ஆபீசர்களை அணுகும் மாபியாக்களுக்கு கர்ண பிரபுக்கள் போல அளந்து கொடுத்துட்டாங்களாம்.

ஆபீசர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால், அரசு நிலத்தை எல்லாம் சட்டவிரோதமா தனியார் நிலமாக்கிட்டாங்களாம். அதனால், அவங்களுக்கு கிடைக்கும் வெகுமான பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடிப் போயிட்டாங்களாம்.

விபரம் தெரிந்த கும்பல் மீடியாவில் அம்பலப் படுத்துவதாக மிரட்டி பணம் பறிப்பு செய்றாங்களாம். ஒரு சிலர் மிரண்டு பணம் கொடுத்திருக்காங்களாம். ஆனால், எல்லாத்துக்கும் துணிந்தவங்க, மீடியா பேரில் மிரட்டியவங்களை ஒரு அறையில் தள்ளி, கதவை சாத்தி, தர்ம அடி கொடுத்து இருக்காங்க.

'இனி இந்த மாதிரி சமாச்சாரத்துக்கு நாங்க வரவே மாட்டோம்'னு எழுதி கொடுத்து விட்டு ஆளை விடுங்க சாமின்னு தப்பி வந்திருக்காங்க.

நீதித்துறை சங்கத்துக்கு ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை நிர்வாக தேர்தல் நடத்தணுமாம். ஆனால், பதவிக்காலம் முடிந்து, நான்காவது வருஷம் துவங்கப் போகுது. இன்னும் தேர்தல் அறிவிப்பை வெளியிடவில்லை. தேர்தல் நடத்தினால் ஜெயிக்க வேணும். அதுக்கான சாதக பாதகங்கள் குறித்து யோசிக்கிறாங்களாம்.

எதிர்த்து போட்டியிட போறவங்க மீது சாக்கு சொல்லி, ஓட்டுரிமை இல்லாம ஆக்குவதை ராஜ தந்திரம் என்று நினைக்கிறாங்களாம். சட்டத்துறை சங்கத்தில் எல்லாமே அறிவாளிங்க. யாரும் கை நாட்டுக்காரங்க இல்லை. அதிலும் கேசுவல் லேபர்கள் இல்லை. சுயமாக சிந்திக்கிறவங்க சங்கம் அது. இவர்களின் சங்கம் சுதந்திரமானது; கட்டுப்பாடானது. தேர்தலை நடத்தியாக வேண்டும் என சீனியர்கள் மத்தியில் பேசப்படுது.

எப்போ தேர்தல் வரும்?

Advertisement