பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' திட்டம்

பெங்களூரு: கர்நாடக பெண்கள், 'சக்தி' திட்டத்தின் கீழ் பஸ்களில் இலவசமாக பயணிக்க, ஆதார் கார்டு அவசியம் இல்லை. பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, ஐந்து வாக்குறுதி திட்டங்களில், 'சக்தி' திட்டமும் ஒன்றாகும்.

இத்திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள், இலவசமாக பயணிக்கின்றனர். மாநிலம் முழுதும் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும், இலவசமாக பயணிக்கலாம்.

'சக்தி' திட்டம் பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பஸ்களில் இலவசமாக பயணிக்க ஆதார் கார்டை காண்பிப்பது கட்டாயம். ஒரே ஆதார் கார்டை காண்பித்து, பல பெண்கள் பயணிக்கும் முறைகேடுகள் நடக்கின்றன.

சிலர் ஆதார் கார்டை மறந்து விட்டு வருவதால், பிரச்னையில் சிக்குகின்றனர். ஆதார் கார்டு இல்லை என்பதால், பெண் பயணியரை பாதி வழியில் இறக்கி விடப்பட்ட சம்பவங்களும் நடக்கின்றன.

ஆதார் கார்டுகளில் உருவப்படம் தெளிவாக இல்லாததும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசு திட்டமிட்டுள்ளது.

இலவச பயணத்திற்கு தகுதியான அனைத்து பெண்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க தயாராகிறது.

இது தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

வரும் நாட்களில் பெண்கள், பஸ்களில் பயணிக்க ஆதார் கார்டு காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. திட்டம் பெண்களை எளிதாக சென்றடைய வசதியாக, ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டு மாதங்களில் தகுதியான பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கும்.

இது தொடர்பான கோப்பு, நிதித்துறைக்கு சென்றுள்ளது. அங்கு ஒப்புதல் கிடைத்த பின், டெண்டர் அழைக்கப்படும்.

ஸ்மார்ட் கார்டு பெற, பெண்கள் கிராமம் - ஒன், பெங்களூரு - ஒன் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். சேவா சிந்து வெப்சைட் பயன்படுத்தி, ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement