12,699 துப்புரவு தொழிலாளர்கள் மே 1ம் தேதி முதல் நிரந்தரம்

பெங்களூரு: துப்புரவு தொழிலாளர்களின் பணியை நிரந்தரமாக்க, அரசு முடிவு செய்துள்ளது. மே 1 ம் தேதியன்று 12,699 துப்புரவு தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர்.

இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:

துப்புரவு தொழிலாளர்கள் மழை, காற்று, வெயில், குளிரை பொருட்படுத்தாமல் பெங்களூரை சுத்தம் செய்கின்றனர். பெங்களூரு 800 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ளது. தினமும் 6,500 டன் குப்பை உருவாகிறது. ஆயிரக்கணக்கான கி.மீ., துார சாலைகள் சுத்தமாவதற்கு, தொழிலாளர்களே காரணம்.

பொது மக்கள் வெளியே கால் பதிப்பதற்கு முன்பே, சாலைகளை சுத்தம் செய்கின்றனர். பண்டிகை நாட்களிலும் தங்கள் பணியை நிறுத்துவது இல்லை. இவர்களின் பணியை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. 55 வயதுக்கு உட்பட்ட துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்க முடிவு செய்து, விண்ணப்பம் வரவேற்றது.

விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 12,699 துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்க முன் வந்துள்ளது. மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தன்று, நிரந்தரமாக்கப்படுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பட்டியல் வெப்சைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1ல் இவர்களுக்கு பணி நியமன உத்தரவு கடிதம் வழங்கப்படும்.

இவர்களின் பணி நிரந்தரமானதும், இவர்களின் ஊதியம் 17,000 ரூபாயில் இருந்து 32,000 ரூபாயாக உயரும். இவர்கள் 'டி' குரூப் ஊழியர்கள் பிரிவில் சேர்க்கப்படுவர். மேலும் 2,701 தொழிலாளர்கள், இன்னும் 2 ஆண்டுகள் பணியை நிறைவு செய்யவில்லை. எனவே அவர்களின் பணி நிரந்தரமாக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement