சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு
பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் லிங்காயத், ஒக்கலிகர் சமூக அமைச்சர்கள் கோபமாக பேசியுள்ளனர். இதனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல், மே 2ம் தேதி அடுத்த கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, 2015ம் ஆண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இதற்காக, 167 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2017ல் கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், 2018 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அறிக்கையை காங்., வெளியிடவில்லை.
தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நடந்து, பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யுமாறு, அறிக்கை கமிட்டியிடம் பா.ஜ., அரசு கூறியது. அதன்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அமல்படுத்தவில்லை.
சிவகுமார் கடிதம்
இந்நிலையில், காங்கிரஸ் 2023ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், டிசம்பர் மாதம், முதல்வர் சித்தராமையாவிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மாநில அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ள லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களை விட, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் சமூக மக்கள் அதிகம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது என்ற தகவல் கசிந்தது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த, லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்தினரிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'அறிக்கையை முறையாக தயார் செய்யவில்லை. 'ஏசி' அறையில் அமர்ந்து தயாரித்த அறிக்கையை ஏற்க மாட்டோம்; புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று லிங்காயத் சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பகிரங்கமாக கூறினர்.
'ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த கூடாது' என்று, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட ஒக்கலிகர் சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முதல்வருக்கு எழுதிய கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அறிக்கையை அமல்படுத்தும் முடிவை, முதல்வர் கிடப்பில் போட்டார்.
இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துமாறு, சித்தராமையாவுக்கு உத்தரவிட்டார். அவர் சொன்னதை கேட்க சித்தராமையாவும் தயாரானார்.
சிறப்பு கூட்டம்
கடந்த 11ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அறிக்கையில் உள்ள அம்சங்கள் பற்றி விவாதிக்க, சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்த வேண்டும்' என்று பல அமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன்படி, நேற்று மாலை விதான் சவுதாவில், சித்தராமையா தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கியதும் எழுந்து பேசிய மல்லிகார்ஜுன் உள்ளிட்ட லிங்காயத் சமூக அமைச்சர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த, எதிர்ப்பு தெரிவித்து ஆக்ரோஷமாக பேசி உள்ளனர்.
இதுபோல துணை முதல்வர் சிவகுமாரும் குரலை உயர்த்தி பேசி இருக்கிறார். ஒக்கலிகர் அமைச்சர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துஉள்ளனர்.
ஒரே குரல்
அறிக்கையை அமல்படுத்த ஆதரவு தெரிவிக்கும் சிவராஜ் தங்கடகி, பரமேஸ்வர் உள்ளிட்ட தலித் சமூக அமைச்சர்களும், பிற்படுத்தப்பட்ட சமூக அமைச்சர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அமைச்சர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதிர்ச்சி அடைந்த சித்தராமையா, அமைச்சர்களை சமாதானப்படுத்தி உள்ளார்.
'ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக, உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ, அதை ஒரு கடிதத்தில் எழுதி என்னிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, கூட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
மே 2ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பற்றிய விவாதம் நடக்க உள்ளது.
கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த அமைச்சர்கள், ஊடகத்தினரை சந்திக்கும் போது, 'எங்கள் மனதில் என்ன உள்ளதோ அது பற்றி கூறினோம். நாங்கள் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை.
'அடுத்த அமைச்சரவை கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பற்றி விவாதிக்கப்படும்' என்று ஒரே குரலில் கூறிவிட்டு சென்றனர்.
சிறப்பு அமைச்சரவை கூட்டம் துவங்குவதற்கு முன்பு, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் பெங்களூரு இல்லத்தில் லிங்காயத் சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 'ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்துவதை எப்படியாவது தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அதை பகிரங்கப்படுத்தி, பொது விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும்' என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்