ஏழை குடும்பத்துக்கு வீடு கட்டி தந்த கிரிக்கெட் வீரர்கள்

உயர் கல்விக்காக வெளிநாடுகள் செல்லும் இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும், படிப்பை முடிந்தாலும் சொந்த ஊருக்கு திரும்பாமல் வெளிநாட்டிலேயே பணியில் சேர்ந்து லட்சங்களை குவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வயதான பெற்றோரை பற்றியும் சிந்திப்பது இல்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் உள்ளனர்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் ராஜுபூஜாரி, 30. தற்போது இவர் இஸ்ரேலில் பணியாற்றி, அங்கேயே வசிக்கிறார். இவரது குடும்பத்தினர் பெங்களூரில் வசிக்கின்றனர்.

இருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். சில இளைஞர்களுடன் இணைந்து, 'ஜெருசலேம் ஸ்டார் கிரிக்கெட்டர்ஸ்' என்ற பெயரில், கிரிக்கெட் அணி அமைத்துள்ளார்.

அந்த இளைஞர்கள், மங்களூரை சேர்ந்தவர்கள். தற்போது இஸ்ரேலில் பணியாற்றுகின்றனர். இந்த அணியினர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி, பரிசுகள் பெற்றுள்ளனர். இவர்கள் இஸ்ரேலில் வசித்தாலும், சொந்த மண்ணை மறக்கவில்லை. அவ்வப்போது மங்களூரு வருகின்றனர். சில நாட்களாவது தங்குகின்றனர்.

சமூக சேவை



கிரிக்கெட் அணியினர், விளையாட்டில் மட்டுமல்ல, சமூக சேவையிலும் ஈடுபடுகின்றனர். சம்பாதிக்கும் பணத்தில், ஏழைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர். அதே போன்று மங்களூரில் வீடு இல்லாத ஏழை குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்து, அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்துள்ளனர்.

மங்களூரின் பள்ளால்பாக் அருகில் உள்ள விவேக் நகரில் சுந்தரி, சுகந்தி என்ற சகோதரியர் தங்களின் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களின் வீடு மிகவும் சிதிலமடைந்திருந்தது. மழை வந்தால் ஒழுகும், வீடு முழுதும் தண்ணீர் புகும். எப்போது இடியுமோ என்ற பீதியில் வசித்தனர்.

வீட்டை புதுப்பிக்க இவர்களிடம் பணம் இல்லை. எனவே அதே வீட்டில் வாழ்ந்தனர். இவர்களின் நிலை குறித்து, முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் சால்யான் மற்றும் அவரது சகோதரர் பிரதீப் சால்யான், ஜெருசலேம் ஸ்டார் கிரிக்கெட்டர்ஸ் அணியினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சகோதரியரின் குடும்பத்துக்கு வீடு கட்டித்தர முன் வந்தனர்.

அழகான வீடு



அணியினர் மங்களூருக்கு வந்து சகோதரிகள் வீட்டை பார்வையிட்டனர். அதன்பின் அந்த வீட்டை இடித்து விட்டு, 12 லட்சம் ரூபாய் செலவில், அழகான வீடு கட்டி கொடுத்தனர்.

இந்த வீட்டில் குளியலறை, கழிப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆறு மாதங்களில் வீடு கட்டி முடிக்கப்பட்டது. சிறப்பாக கிரஹபிரவேச நிகழ்ச்சியும் நடந்தது. தற்போது இந்த வீட்டில் சகோதரிகள் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வசிக்கின்றனர்.

பணிக்காக வெளிநாடு செல்லும் பலர், சொந்த ஊரை மறந்து விடுகின்றனர். வெளி நாட்டிலேயே செட்டில் ஆகின்றனர். இவர்களுக்கு இடையே, ஜெருசலேம் ஸ்டார் கிரிக்கெட் அணியினர் மாறுபட்டவர்கள். தங்களின் சொந்த ஊரை மறக்காமல் தொண்டு செய்து, மற்றவருக்கு முன் மாதிரியாக விளங்குகின்றனர். இவர்களுக்கு பாராட்டு குவிந்துள்ளது.

கிராமத்தினர் கூறியதாவது:

ஜெருசலேம் ஸ்டார் கிரிக்கெட்டர்ஸ் உதவியுடன், ஏழை குடும்பத்தினருக்கு வீடு கிடைத்தது. கடலோர நகரில் இருந்து பிழைப்புக்காக இஸ்ரேல் சென்ற இளைஞர்கள், கிரிக்கெட்டில் சாதிக்கின்றனர். சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டுவது பாராட்டத்தக்க விஷயமாகும்.

தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில், ஏழை குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்துள்ளனர். இதற்காக 12 லட்சம் ரூபாய் செலவிட்டனர். மற்றவருக்கு ஒரு ரூபாய் கொடுக்கவும் மனம் வராத பலர் உள்ளனர். மற்றவருக்கு உதவும் எண்ணம் கொண்ட இளைஞர்கள், மற்றவருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.


இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -
.

Advertisement