பீமகோலா தடுப்பணையில் தண்ணீர் சாகச விளையாட்டு

மலைகளுக்கு நடுவே பாயும் சுத்தமான தண்ணீர், அதன் அருகே அழகான பூங்காவுடன் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் பீமகோலா தடுப்பணையில், நீர் சாகச விளையாட்டுகளை துவக்க சுற்றுலாத்துறை தயாராகி வருகிறது.
உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் தாலுகாவின் ஹனகோனா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ஹோடெகாலி கிராமத்தில் பீமகோலா தடுப்பணை உள்ளது. ஹொடெகாலி, ஹனகோனா கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் நோக்கில் பீமகோலா ஏரியை ஒட்டி தடுப்பணை கட்டப்பட்டது. அதை சரியாக நிர்வகிக்காத காரணத்தால், நீர் அசுத்தமடைந்து பயன்படுத்த முடியாமல் போனது.
அம்ருத் சரோவர்
இதை பார்த்த மாவட்ட பஞ்சாயத்து, 'அம்ருத் சரோவர்' திட்டத்தின் கீழ், ஏரி நீரை சுத்திகரித்து அணையில் தேக்கியது. சில நாட்களாக மழை பெய்ததால், ஏரியில் இருந்து பெருமளவில் தண்ணீர் அணைக்கு பாய்ந்து வந்துள்ளது. அணை அருகிலேயே அழகான பூங்கா உருவாக்கப்பட்டது. தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அணை பகுதியில் நீர் சாகச விளையாட்டுகளை ஏற்பாடு செய்ய சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் பணிகளை துவக்க தயாராகிறது.
இது குறித்து சுற்றுலாத்துறை துணை இயக்குனர் மஞ்சுநாத் நாவி கூறியதாவது:
பீமகோலா தடுப்பணையை சீரமைத்து, பூங்கா உருவாக்கிய பின், சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். இவர்களை குஷிப்படுத்த தண்ணீரில் சாகச விளையாட்டுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். பீமகோலா ஏரி 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. ஏரியில் சாகச விளையாட்டுகள் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது அதற்கான திட்டங்கள் வகுக்கிறோம்.
மே 2வது வாரம்
இதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளனர். அணையில் பெடல் போட்டிங், கயாகிங் உட்பட பல விதமான சாகச விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்படும். மே மாதம் இரண்டாம் வாரம் விளையாட்டுகள் துவங்கும்.
மழைக்காலம் துவங்கிய பின், வல்லுநர் குழுவினர் மீண்டும் ஆய்வு செய்வர். அப்போது கூடுதல் தண்ணீர் சாகச விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்படும். பீமகோலா அணையில் தண்ணீர் சாகச விளையாட்டுகளை துவங்கிய பின், முண்டகோடா தாலுகாவின், பாச்சனகி அணை, சித்தாபுரா தாலுகாவின், ஹோசூர் அருகில் உள்ள நிப்லி நீர் வீழ்ச்சியிலும் சாகச விளையாட்டுகளை துவக்க திட்டமிட்டுள்ளோம்.
வல்லுநர் குழுவின் சிபாரிசு படி, தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து கொண்டு, சாகச விளையாட்டுகள் நடத்தப்படும். இது சாகச விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
. - நமது நிருபர் -
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்