12,500 அடி உயரம் கொண்ட கேதார்கந்தா மலை உச்சியை அடைந்த 8 வயது சிறுமி

உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்கந்தா மலையின் உச்சியை அடைய வயது தடையில்லை என்பதை மைசூரை சேர்ந்த 8 வயது சிறுமி நிரூபித்து உள்ளார்.

மைசூரு ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர்கள் ஆனந்த் - பானுமதி தம்பதி. இவர்களின் மகள் சனாயா ஆனந்த், 8. தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரின் தந்தை ஆனந்த், தினமும் சாமுண்டி மலையில் 'ஜாக்கிங்' செல்வார். இதை பார்த்த சனாயா, தன் 4 வயதில் தந்தை, அவரது நண்பர்களுடன் 3,500 அடி உயரமுள்ள சாமுண்டி மலையில் தினமும் ஜாக்கிங், நடைபயிற்சி செல்ல துவங்கினார். மேலும், 4 வயதில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான 5,617 அடி உயரமுள்ள குமாரபர்வதா மலையில் ஏறி சாதனை படைத்தார்.

உத்தரகண்டை சேர்ந்த 'ஹில்வே டிரெக்ஸ்' நிறுவனர்கள் பச்சன் சிங் ராவ், சந்தீப் ராவத், 12,500 அடி உயரம் உள்ள கேதார்கந்தா மலையேற்ற போட்டியை கடந்த மாதம் நடத்தினர்.

இதில், சனாயா ஆனந்தும் பங்கேற்றார். இவருடன் மைசூரை சேர்ந்த மலையேறுபவர் குருகிளிம்பர், உத்தரகண்ட் வழிகாட்டிகள் மோகன், நரேந்திரா சென்றனர்.

கேதார்கந்தா மலையேற்றம் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. சங்க்ரி கிராமத்தில் இருந்து கரடு முரடான பாதைகளை கடந்து, உச்சியை அடைய நான்கு நாட்களாகும். இதற்கு மன உறுதியும், திடகாத்திரமான உடல் ஆரோக்கியமும் இருக்க வேண்டும்.

ஏனெனில், இங்கு 'மைனஸ்' டிகிரில் குளிர் இருக்கும். ஆக்சிஜனும் பற்றாக்குறை இருக்கும்.

இதை எதையும் பொருட்படுத்தாமல், சனாயா ஆனந்த், 12,500 அடி உயரம் கொண்ட உச்சியை, நான்கு நாட்களில் அசால்டாக கடந்து சாதனை படைத்து உள்ளார். சிறு வயதில் கேதார்கந்தா உச்சியை, அடைந்த அவரின் செயலுக்கு, பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement