மே.வங்கத்தில் மம்தாவின் எதிர்ப்பையும் மீறி முகாம்களை பார்வையிட்ட கவர்னர்

17


கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக முகாம்களில் தங்கி உள்ள மக்களை கவர்னர் சிவி போஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் குறைகளை கேட்டறிந்தார்.


மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.


கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் மால்டாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து பேச கவர்னர் சிவி போஸ் முடிவு செய்தார். ஆனால், இந்த பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.


ஆனால், அதனை ஏற்காத கவர்னர் சிவி போஸ், கள நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் உண்மையா என ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனை, முகாம்களுக்கு செல்வேன். மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப மத்திய படையினர் மற்றும் மாநில போலீசார் பணியாற்றுகின்றனர். ஆய்வுக்கு பிறகு எனது பரிந்துரையை தெரிவிப்பேன் எனக்கூறினார்.

கோல்கட்டாவில் இருந்து ரயில் மூலம் மால்டா வந்த கவர்னர், முகாம்களில் தங்கி உள்ள மக்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்கள் தெரிவித்த குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனை சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


தொடர்ந்து அவர் கூறுகையில், சமூக விரோதிகள் வந்து தங்களை தாக்கியதுடன், தங்கள் வீடுகளை சேதப்படுத்தினர். சொத்துகளை கொள்ளையடித்து சென்றனர். வேறு வழியில்லாமல் முகாம்களுக்கு வந்ததாக பெண்கள் புகார் கூறினர் என தெரிவித்தார்.


இதனிடையே, மீடியாக்களிடம் பேச தங்களை அனுமதிக்கவில்லை என நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தடுப்புகளை உடைத்து எறிந்தனர். போலீசார் எங்களை கிரிமினல் போல் நடத்துவதாகவும், சரியான உணவு வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

Advertisement