நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்

பிஜாப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் நக்சல்களின் 12 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையால் நக்சல்கள் ஆதிக்கம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பாதுகாப்பு படைகள், 12 நக்சல் பதுங்கு குழிகள் கண்டறியப்பட்டு அழித்தன. இதில் பயிற்சி முகாம் மற்றும் வெடிமருந்து சேமிப்பிடங்கள் அடங்கும்.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி கூறியதாவது:
கோப்ராவின் 208வது பட்டாலியன்யனின் உயர்மட்ட சி.ஆர்.பி.எப்., பிரிவான ஜீத்பள்ளி முகாமில் இருந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டோம். அப்போது அங்கிருந்த மலைப்பகுதியில் மறைவிடம் இருந்தது. அது 160 சதுர அடி பரப்பளவு கொண்ட பதுங்கு குழி போன்றது. இவ்வாறு 12 பதுங்கு குழிகள் இருந்தன. அவை அனைத்து அழிக்கப்பட்டன. அதில் ஒரு கான்கிரீட் பலகை இருந்தது. மேலும் 6 சோலார் தகடுகள், 2 நக்சல் சீருடைகள், 2 சீலிங் பேன்கள் மற்றும் பிற பொருட்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
