மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி

புதுடில்லி:''மஹாத்மா காந்தி, நேரு, படேல், அம்பேத்கர் ஆகியோரிடம் பயத்தை நட்பாக்கி கொள்வது பற்றியும், தைரியமாக இருப்பதையும் கற்றுக் கொண்டேன்'', என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் பேசியதாவது:
நேரு கற்றுக் கொடுத்தது
முன்னாள் பிரதமர் வெறும் அரசியல்வாதி மட்டும் அல்ல. அவர் சிந்தனையாளர். ஆபத்தான காலகட்டத்தில் புன்னகையுடன் நடந்து சென்று வலிமையுடன் திரும்பி வந்தவர். அவரது மிகப்பெரிய பாரம்பரியம், அவரை வடிவமைத்த கொள்கையான உண்மையை தொடர்ந்து பின்பற்றுவதில் உள்ளது.அவர் எங்களுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கவில்லை. பயத்தை எதிர்கொள்ளவும், உண்மைக்காக நிற்கவும் கற்றுக் கெடுத்தார். தேட வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், ஆர்வத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் _ இதுவே எனது ரத்தத்தில் ஓடுகிறது.
பொழுதுபோக்கு அல்ல
எனது பாட்டி இந்திரா, மலைகள் மீதுள்ள ஆர்வம், விலங்குகள் எப்படி எங்களது குடும்பத்தில் அங்கமாக மாறியது, உடற்பயிற்சி பற்றி எங்களிடம் கூறியுள்ளார். தோட்டத்தில் பறவைகளை சோனியா இன்னும் பார்த்து வருகிறார். நான் ஜூடோ பயிற்சியை தவறவிடவில்லை. இவை வெறும் பொழுது போக்கு அல்ல. நாம் யார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
சிறந்த தலைவர்கள்
மிகச்சிறந்த தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர், படேல் மற்றும் நேதாஜி ஆகியோர், பயத்தை எப்படி நட்பாக்கிக் கொள்வது என்பது பற்றியும், தைரியத்தை பற்றியும் கற்றுக் கொடுத்தனர்.பெரிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து உண்மை துணையுடன் மஹாத்மா காந்தி நின்றார். அடக்குமுறையை எதிர்த்து இறுதியில் சுதந்திரம் கோரும் தைரியத்தை நேரு வழங்கினார். அறிவியல், கலை, எதிர்ப்பு போன்ற எந்தவொரு முயற்சியும் பயத்தை எதிர்கொள்வதில் இருந்து துவங்குகிறது. அஹிம்சையில் நீங்கள் உறுதியுடன் இருந்தால், உண்மை தான் உங்களின் ஆயுதம் ஆக இருக்கும். அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும், அவர்கள் அதில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் தான் அவர்கள் சிறந்த தலைவர்களாக மாறினர்.
உண்மையான தலைமை
உண்மையான தலைமை என்பது தைரியம், ஆர்வம் மற்றும் இரக்கத்தில் இருந்து உருவாகிறது. உண்மை சிரமம் ஆகிவிட்ட சகாப்தத்தில், எவ்வளவு விலை கொடுத்தலும் உண்மைக்காக உறுதியுடன் நிற்பேன்.
உண்மையான தலைமை என்பது கட்டுப்பாட்டை பற்றியது அல்ல. இரக்கத்தைப் பற்றியது. உண்மை சிரமம் ஆக இருக்கும் இன்றைய இந்தியாவில் நான் எனது தேர்வை செய்துள்ளேன். எவ்வளவு விலை கொடுத்தாலும் அதற்காக நிற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.









