சென்னை அணியில் 'பேபி டிவிலியர்ஸ்' * 'பேட்டிங்' பலம் பெறுமா

சென்னை: சென்னை அணியில் 'ஆல்-ரவுண்டர்' டிவால்ட் பிரவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரிமியர் தொடரில் சென்னை அணி 7 போட்டிகளில் 5 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ருதுராஜ், வலது முழங்கை காயத்தால் பாதியில் விலகினர். இவருக்கு பதில் இளம் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டார். கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார்.
தற்போது தமிழக 'வேகப்புயல்' குர்ஜப்னீத் சிங்கும் காயத்தால் விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக தென் ஆப்ரிக்காவின் இளம் 'ஆல்-ரவுண்டர்' டிவால்ட் பிரவிஸ் 21, சேர்க்கப்பட்டுள்ளார்.
எங்கும் ரன் மழை
கடந்த 2022ல் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை தொடரில் (19 வயதுக்கு உட்பட்ட) பிரவிஸ், 6 இன்னிங்சில் 2 சதம் உட்பட 506 ரன் குவித்தார். 2023ல் இரு சர்வதேச 'டி-20' போட்டிகளில் 5 ரன் எடுத்தார். இருப்பினும் இந்தியாவின் பிரிமியர் லீக், சி.பி.எல், எம்.எல்.சி, எஸ்.ஏ., 20 என உலகம் முழுவதும் நடக்கும் உள்ளூர் 'டி-20' தொடரில் அசத்தினார்.
இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த எஸ்.ஏ., 20 தொடரில் எம்.ஐ., கேப்டவுன் அணிக்காக பங்கேற்றார். பைனலில் 18 பந்தில் 38 ரன் விளாசிய இவர், மொத்தம் 291 ரன் (ஸ்டிரைக் ரேட் 184.17) எடுத்து, எம்.ஐ., அணி, முதல் முறையாக கோப்பை வெல்ல கைகொடுத்தார்.
ஏற்கனவே பிரிமியர் தொடரில் மும்பை அணிக்காக 2022, 2024ல் 10 போட்டிகளில் (230 ரன்) விளையாடினார். மொத்தம் 81 'டி-20' போட்டிகளில் 1787 ரன் (ஸ்டிரைக் ரேட் 144.93) எடுத்துள்ளார்.
விலை ரூ.2.2 கோடி
இந்த ஆண்டு நடந்த பிரிமியர் ஏலத்தில் பிரவிஸ் அடிப்படை தொகை ரூ. 75 லட்சம். மும்பை விடுவித்த நிலையில், இவரை எந்த அணியும் வாங்கவில்லை. தற்போது சென்னை அணி வாழ்வு கொடுத்துள்ளது. ரூ. 2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் போல மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடிக்கும் திறன் பெற்றவர் பிரவிஸ். பார்ப்பதற்கும் டிவிலியர்ஸ் மாதிரி இருப்பார். இதனால் 'பேபி டிவிலியர்ஸ்' என செல்லமாக அழைக்கின்றனர். இவரது அதிரடி ஆட்டம் சென்னை அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும். திரிபாதி அல்லது விஜய் சங்கருக்கு பதில் இடம் பெறலாம்.
நாளை வான்கடே மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை சந்திக்க உள்ளது. இதில், பிரவிஸ் களமிறங்கலாம்.

Advertisement