ஒரே மின் இணைப்பில் பல கடைகள் சிறு வியாபாரிகள் பாதிப்பு

ஊட்டி: ஊட்டி பூமாலை வணிக வளாகத்தில், ஒரே மின் இணைப்பில் பல கடைகள் செயல்பட்டு வருவதால், மின் கட்டணம் செலுத்துவதில் வியாபாரிகளுக்குள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பூமாலை வணிக வளாகம் உள்ளது. அதில், 18 கடைகள் உள்ளன. இங்கு மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பலர், உணவு விடுதி, தேநீர் கடை, கைவினை பொருட்கள், சிறு தானியங்களை கொண்டு உணவுகள் தயாரிக்கும் சிற்றுண்டி கடை, இ-சேவை மையம் உள்ளிட்ட கடைகள் செயல்படுத்தி வருகின்றனர்.

அங்குள்ள, கடைகளுக்கு ஒரே ஒரு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே மின் இணைப்பில் அனைத்து கடைகளும் செயல்பட்டு வருகிறது. மின் கட்டணம் செலுத்தும் சமயங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

'மகளிர் திட்டம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வணிக வளாகத்தில்,ஆய்வு மேற்கொண்டு கடை வைத்துள்ள அனைவருக்கும் தனித்தனியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும்,' என பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

வியாபாரிகள் கூறுகையில், 'இங்குள்ள ஒரே மின் இணைப்பால் கட்டணம் செலுத்தும் சமயங்களில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தனித்தனியாக மின் இணைப்பு கொடுத்து முறைப்படுத்த நகராட்சிக்கு கோரி மனு அளித்துள்ளோம். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உடனே ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement