எம்.ஜி.ஆர்., நகர் துர்க்கை அம்மன் முனீஸ்வரன் கோவில் திருவிழா

கூடலுார்: கூடலுார் எம்.ஜி.ஆர்., நகர் துர்க்கை அம்மன், முனீஸ்வரன் கோவில் தேர் திருவிழா நேற்று துவங்கியது.

கூடலுார் எம்.ஜி.ஆர்., நகர் அருள்மிகு துர்க்கை அம்மன், முனீஸ்வரன் கோவில் தேர் திருவிழா நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. 10:30 மணிக்கு கோவிலில் இருந்து பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது.

ஊர்வலம் கோழிக்கோடு சாலை நர்த்தகி, செம்பாலா வழியாக, நந்தட்டி மாதேஸ்வரன் கோவில் சென்று கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், மாலை விளக்கு பூஜை நடந்தது.

இன்று, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு தேர் ஊர்வலம் துவங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, ஊர் மக்கள் செய்துள்ளனர்.

Advertisement