கடனாளிகளாக மகளிர் குழு!
நீலகிரி மாவட்டத்தில் பெருகி வரும், 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களை கண்காணிக்க மகளிர் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...
வசூலில் நடக்கும் அத்துமீறல்களுக்கு கண்காணிப்பு அவசியம்
குன்னுார், ஏப். 19-
நீலகிரி மாவட்டத்தில், 70க்கும் மேற்பட்ட 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களை மையமாக வைத்து உடனடி கடன் வழங்கி வருகின்றன. பணம் விரைவாக கிடைப்பதால் பல்வேறு பகுதிகளிலும் மகளிர் குழுவினர் 'மைக்ரோ பைனான்ஸ்' முறையில் கடன் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவர்கள், சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கடன் பெறும் பல மகளிர் குழுவினர், பெரும்பாலும் சுய தொழில் செய்வது இல்லை. பிற செலவினங்களுக்கு இந்த தொகையை பயன்படுத்துகின்றனர். இதனால், பலர் வாங்கிய கடனை முறையாக செலுத்த வேறு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொதுவாக கடன் வாங்க, ஒருவர் விண்ணப்பிக்கும் போது, வங்கி 'சிபில் ஸ்கோர்' என்கிற நடைமுறையை வைத்து கடன் வழங்கப்படுகிறது.
ஆனால்,'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள், இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் வட்டியுடன், 1.40 லட்சம் வரை கடன் கட்டுவதாக கூறப்படுகிறது. மாதம், 3,000 முதல் 5000 ரூபாய் வரை, 5 ஆண்டுகள் வரை கட்டுகின்றனர். தவணை தவறினால் அதற்கு தனி வட்டியும் விதிக்கப்படுகிறது. இதனால், பலர் கடன் சிக்கலில் சிக்குவதால் குடுப்பத்தில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. 'மகளிர் குழுக்களை சிக்க வைக்கும் இத்தகைய 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், ''சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், இது போன்ற உடனடி கடன்கள் வழங்காத போதும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான மகளிர் குழுவினருக்கு கடன்களை வழங்குகின்றன.
கடன் தொகை கட்ட இயலாமல் அவதிப்பட்டு குடும்பங்கள் சிதைந்து போகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம், இத்தகைய நிறுவனங்கள் குறித்து முழு விசாரணை நடத்தி, மகளிர் குழுவினர் பாதிக்காத வாறு முறைப்படுத்த வேண்டும். இதில், நடக்கும் குளறுபடிகளை களை மகளிர் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன் கூறுகையில்,'' மகளிர் குழுக்களை ஆறு மாதம் காண்காணித்த பின்பு தான், கடனுதவி பெற வங்கிகளுக்கு நாங்கள் பரிந்துரை செய்வோம். அதன்பின் வங்கிகள் மற்ற நடைமுறைகளை பின்பற்றுவது வழக்கம். ஆனால், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. இதனால், மகளிர் குழுக்கள் அவர்களிடம் கடன் பெற்று சிக்கலுக்கு உண்டாகும் சூழல் ஏற்படுகிறது. இது போன்ற நிறுவனங்களை அவர்கள் அணுகாமல், அதிகாரிகளிடம் ஆலோசனை பெறலாம். இதற்கான விழிப்புணர்வை நாங்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்