அரசு வேலை வாங்கிதருவதாக ரூ. 75 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை, அரக்கோணத்தில், அழகப்பா தொலைதுார கல்வி மையத்தை நடத்தி வருபவர் விஜி, 39. அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:

திருநீர்மலையைச் சேர்ந்தவர் செல்வராஜ், 47 என்பவர், எங்கள் கல்வி மையத்திற்கு வந்தார். 'தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் எனக்கு நல்ல பழக்கம் உள்ளது. அறநிலையத்துறை, பத்திரப்பதிவு மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருகிறேன்' என்று கூறினார்.

தங்கள் கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள், 26 பேரிடம் இருந்து, 75 லட்சம் ரூபாய் பெற்றார். வாக்குறுதி அளித்தப்படி வேலை வாங்கி தரவில்லை; வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவின், வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில், செல்வராஜ் மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்று, போலியான பணி நியமன ஆணை கொடுத்து, மோசடி செய்ததது தெரியவந்தது.

விழுப்புரம் தடய அறிவியல் துறையில் உதவியாளராக பணி புரிந்து வரும் அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். செல்வராஜிடம், யாரேனும் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement