3 யூனியன்களில் ரூ.11.82 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
காங்கேயம்:காங்கேயம், வெள்ளகோவில், குண்டடம் யூனியன்களில், 11.82 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி நான்கா-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம், வெள்ளகோவில், குண்டடம் ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் குறிப்பாக காங்கேயம் யூனியனில் பரசேர்வழி ஊராட்சி சிவியர்பாளையத்தில், 8.92 கோடி ரூபாய் மதிப்பில், பரஞ்சேர்வழி குருக்கள்பாளையம் சாலை முதல் பூச்சக்காட்டுவலசு இடையில் தம்பையகாடு வழியாக, நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி; குண்டடம் யூனியன் வடசின்னாரிபாளையம் ஊராட்சி வீணம்பாளையத்தில், 85.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீணம்பாளையம் முதல் சுள்ளிபெருக்கி பாளையம் வரை சாலை அமைக்கும் பணி; வெள்ளகோவில் யூனியன் வள்ளியரச்சல் ஊராட்சி தென்னங்கரைப்பாளையத்தில், 41.88 லட்சம் ரூபாய் மதிப்பில், குட்டப்பாளையம் -மாந்தபுரம் முதல் தென்னங்கரைப்பாளையம் சாலை வரை சாலை அமைக்கும் பணி அடங்கும்.