தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூரில் கலைஞர் கைவினைக் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
தமிழகத்தில் இருக்கும் அனைத்து கைவினைக் கலைஞர்களின் மேம்பாட்டுக்காக இன்று தொடங்கி வைத்திருக்கும் இந்த திட்டம் என்பது, சமூகநீதியை, சமநீதியை, மனித நீதியை, மனிதஉரிமை நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டம்.
மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு கடந்த 2023ம் ஆண்டு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அதன் பெயர் விஸ்வகர்மா திட்டம். 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு திறன் பயிற்சி தந்து 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னாங்க.
நம்மை பொறுத்தவரைக்கும் எந்த திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டக்கூடிய நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால் அந்த விஸ்வகர்மா திட்டம் அப்படியான திட்டம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த திட்டத்தின் கீழ் ஒருவர் பயன் பெற வேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர் உடைய குடும்பம் காலம்காலமாக செய்யக்கூடிய தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு நாம் கடுமையாக எதிர்த்தோம்.
அதுமட்டும் அல்ல... விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை பார்த்து எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது. 18 வயது என்பது ஒரு மாணவர் உயர்கல்விக்காக கல்லூரிக்கு போகிற வயதா? இல்லை குடும்பத்தொழிலை செய்யவேண்டும் என்று தள்ளிவிடுகிற வயதா?
படிப்பை விட்டு வெளியே போகும் மாணவர்களையும் மீண்டும் கல்விச்சாலைக்குள் அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்பது தான் ஒரு அரசின் கடமையே தவற, அவர்களை படிப்பை விட்டு வெளியேற்றுவதும், அதுவும் குடும்பத் தொழிலை செய்யச் செய்வதும் கிடையாது.
நமது திராவிட மாடல் ஆட்சியில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலமாக பள்ளி முடித்த அனைவரும் உயர் கல்வி செல்ல வேண்டும் என்று நாம் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்.
நாம், நான் முதல்வன் திட்டத்தில் எதிர்கால உலகத்தை எதிர்கொள்ள தேவையான பயிற்சிகளை கொடுத்து, நமது குழந்தைகள் பெரிய, பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் வேலை செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால், பா.ஜ., என்ன நினைக்கிறது... அவர்கள் குடும்பத்தொழிலில் பயிற்சி கொடுத்து வெளியுலகத்தையே பார்க்கக்கூடாது என்று நினைக்கிறது. அதுவும் சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். இதை மனசாட்சி உள்ள ஒருத்தர் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
அதில் நான் குறிப்பிட்ட முதல் மாற்றம், விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையை நீக்கி தகுதியான தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாற்றினோம்.
அடுத்து 2வது மாற்றம், விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18ல் இருந்து 35 ஆக உயர்த்த வேண்டும். அடுத்து 3வது மாற்றம், கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்ற வேண்டும்.
ஆக மிக முக்கியமான இந்த 3 மாறுதல்களை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். எந்த திருத்தங்களையும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர். அதனால் தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் தமிழக அரசு செயல்படுத்தாது என்று மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துவிட்டோம்.
அதேநேரத்தில் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி உருவானது தான் இந்த கைவினைத்திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் 18 தொழில்கள் தான் இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் விண்ணப்பதாரர் அவரின் குடும்ப தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் நமது திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்த வயது 35 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளோம். அதனால் கல்லூரிக்கு போகும் வயதில் குடும்ப தொழிலை பார்த்தால் போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம்.
இந்த திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தில் மானியம் கிடையாது. இதுவரை 24, 907 விண்ணப்பங்கள் வந்துள்ளது. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 8951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி வரை கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் கைவினைத்திட்டம் அனைத்து வகையினருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. யாரையும் விலக்காமல் சமூக பாகுபாடு பார்க்காமல் அமைக்கப்பட்டு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விரும்பின கைவினைத் தொழிலை செய்யலாம்.
தமிழகம் இன்றைக்கு மாபெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சொன்னால் பெரு நிறுவனங்களால் மட்டும் இந்த வளர்ச்சி வந்துவிடவில்லை. சிறு,குறு தொழிலை நடத்தும் நிறுவனங்களால் தான் நாம் இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கி இருக்கிறோம்.
சிறு,குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழக அரசு இந்தியாவிலேயே 3வது இடத்தை வகித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 31 லட்சம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த எண்ணிக்கையில் இது எவ்வளவு தெரியுமா...9.4 விழுக்காடு.
அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சிகளை நாம் பரவலாக தொடங்கி வருகிறோம். அந்த வகையில் தான் இந்த திட்டமும் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் தமிழக சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் மூலமாக சுமார் 15,000 மாற்றுத்திறனாளிகள் தேர்தலே இல்லாமல் உறுப்பினர் ஆக போகின்றனர். இதுபோன்ற திட்டங்கள் மூலமாக தான் ஒரு முதல்வராக நான் மனநிறைவு அடைந்து கொண்டு இருக்கிறேன்.
தொழில்களை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோர்களுக்கு உதவுகிற வகையில், இந்த விழாவில் 5 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
1. அறிவுசார் சொத்துரிமையான புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.25,000ல் இருந்து ரூ.1. லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
2. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன மற்றும் பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
3. தொழில்நிறுவனங்கள் மிகுதியாக இருக்கக் கூடிய காஞ்சிபுரம் பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
4.காக்களூர் உற்பத்தியாளர் தொழிற்பேட்டையில் தொழில் நுட்பத்திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் மற்றும் இயந்திர தளவாடங்கள் இருக்கக்கூடிய புதிய மையம், ரூ.3.90 கோடியில் ஏற்படுத்தப்படும்.
5.குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கக்கூடிய காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி ரூ.1. லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மேலும்
-
புட்லுார் கோவில் குளத்தில் கரை அமைக்க கோரிக்கை
-
கால்வாயில் விழுந்தவர் பலி
-
7 வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார் நால்வர் காயம்; போதை ஓட்டுநருக்கு 'காப்பு'
-
சென்னிமலை மலை கோவில் பாதையில்இரவோடு இரவாக 'டோல்கேட்' மாற்றம்
-
சத்தி, பங்களாப்புதுாரில்இன்ஸ்பெக்டர் இல்லைபணிகள் மந்தம் என புகார்
-
3 யூனியன்களில் ரூ.11.82 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்