நள்ளிரவில் 'ஜாலி வாக்' பழங்களை ருசித்த யானை

கூடலூர்: கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த, வாகனத்தில் இருந்த பழத்தை யானை ருசித்து சென்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வழியாக, கர்நாடக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பின், வரும் வாகனங்கள் தொரப்பள்ளி, பந்திப்பூர் புலிகள் காப்பகம் நுழைவாயில் பகுதியில் நிறுத்தி காலையில் பயணத்தை தொடர்கின்றனர்.

நேற்று முன்தினம், நள்ளிரவு 2:00 மணிக்கு உலா வந்த ஒற்றை யானை, சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் இருந்த பழங்களை எடுத்து ருசித்தது. டிரைவர்கள் சத்தமிட்டு விரட்டியும் நகரவில்லை. ஹைவே ரோந்து போலீசார் வாகனத்திலிருந்து ஒலி எழுப்பி யானையை விரட்டினர்.

இச்சம்பவத்தால், வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். இரவில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement