மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு; ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த 8 பேர் கைது

12


மதுரை: திண்டுக்கல்லில் ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு கடத்தப்பட்ட மதுரை தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் 12 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கருமுத்து சுந்தரம் 58. மதுரையில் கல்வி நிறுவனங்கள், மில்களை உருவாக்கிய கருமுத்து தியாகராஜர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர்களுக்கு தென்மாவட்டங்களில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரூ.பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் சொத்து.


அதை திண்டுக்கல்லைச் சேர்ந்த மரியராஜ் 70, என்பவர் அபகரிக்க திட்டமிட்டு தனக்கு சுந்தரம் பவர் பத்திரம் எழுதிகொடுத்தது போல் ஆவணங்களை தயார் செய்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் சுந்தரம் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பு சுந்தரத்திற்கு சாதகமாக வரஇருப்பதை அறிந்த மரியராஜ், நண்பர்களுடன் ஏப்.,6ல் சுந்தரம் வீட்டிற்கு சென்று சொத்தை தன் பேருக்கு எழுதித்தருமாறு கேட்டு மிரட்டி காரில் கடத்திச் சென்றார். முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு கேமரா, ஹார்டு டிஸ்க், மோடம் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றனர்.



காரைக்குடி அழைத்துச்சென்று, அங்கிருந்து மற்றொரு காரில் மயிலாடுதுறை அழைத்துச்சென்று ஜெனமேந்திரன் 38, என்பவர் வீட்டில் தங்க வைத்தனர். பின் மறுநாள் வடமாநிலங்களுக்கு அழைத்துச்சென்றனர். தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா, நாக்பூர், ஆந்திரா, பெங்களூரு என கடத்தல்காரர்களை பின்தொடர்ந்தனர். இதற்கிடையே ஆள் கடத்தல் வழக்கில் மரியராஜ், அருள்செல்வன் 35, அருள் 42, விக்னேஷ் 24, முத்துகிருஷ்ணன் 42, ஜெனமேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை அறிந்த கூட்டாளிகள் சிவகங்கை மாவட்டம் வேலங்குடி ராமச்சந்திரன் என்ற அழகு 42, மயிலாடுதுறை கிரிவாசன் 46, சுந்தரத்தை மதுரையில் இறக்கிவிட திட்டமிட்டு திரும்பினர்.


அவர்களை பின்தொடர்ந்து வந்த போலீசார் நேற்றுமுன்தினம் இரவு மதுரை ரிங் ரோட்டில் சுந்தரத்தை மீட்டனர். போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

Advertisement