மனைவியால் தூக்கில் தொங்கிய கணவர்; சாக்கடையில் சாம்பலை கரைக்குமாறு வீடியோவில் உருக்கம்

லக்னோ: உ.பி.,யில் மனைவி மற்றும் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் என்ஜினியராக பணியாற்றும் கணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


அவுரையா மாவட்டத்தைத் சேர்ந்தவர் மோஹித். இவருக்கும் பிரியா யாதவ் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


இல்வாழ்க்கையின் தொடக்கத்தில் இருவரும் சந்தோஷமாக இருந்து உள்ளனர். அதன் பின்னர், கணவன், மனைவி இடையே பிரச்னை எழுந்தது. கடும் மன உளைச்சலில் இருப்பதை கண்டு கொண்ட மோஹித் உறவினர்கள் அவரிடம் விபரம் கேட்டுள்ளனர்.


தமது சொத்துகளை எழுதிக் கொடுக்குமாறு கேட்டு பிரியாவும், மாமியாரும் கொடுமைப்படுத்துவதை அவர்கள் தெரிந்து கொண்டனர். நகைகள், பணம் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு, துன்புறுத்தி வருவதையும் அறிந்தனர்.


இந் நிலையில், வீடியோ ஒன்றை மோஹித் வெளியிட்டுவிட்டு, ஓட்டல் அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வீடியோவையும் கைப்பற்றி உள்ளனர்.


அதில் அவர் கூறி உள்ளதாவது;


என் மனைவி பிரியா, அவரின் அம்மா இருவரும் அனைத்து நகைகள், புடவைகளை தன்னிடமே வைத்துக் கொண்டனர். வீட்டையும், சொத்தையும் எழுதி தராவிட்டால் என் மீதும், குடும்பத்தினர் மீதும் வரதட்சணை கொடுமை என்று போலீசில் புகார் கொடுப்பேன் என்று என் மனைவி மிரட்டுகிறார்.


இந்த வீடியோ உங்கள் கைகளில் கிடைக்கும் போது நான் உலகத்தை விட்டு போய்விடுவேன். ஆண்களுக்கு என்று ஒரு சட்டம் இருந்திருந்தால் ஒருவேளை நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன். என் மனைவி, அவரது குடும்பத்தினரின் சித்ரவதையை தாங்க முடியவில்லை.


என் மரணத்துக்கு பின்னர் நீதி கிடைக்கவில்லை என்றால் என் அஸ்தியை ஒரு சாக்கடையில் கரையுங்கள். அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்.


இவ்வாறு அந்த வீடியோவில் மோஹித் பேசி உள்ளார்.


இந்த சம்பவம் குறித்து போலீஸ் எஸ்.பி., அபய்நாத் திரிபாதி கூறுகையில், ரயில்நிலைய சாலையில் உள்ள ஓட்டல் அறையில் இருந்து மோஹித் வெளியே வரவில்லை என்று எங்களுக்கு தகவல் வந்தது. நாங்கள் கதவை திறந்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார்.


தடயவியல் அதிகாரிகள் மூலம் அங்குள்ள ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரின் முகவரியை கண்டுபிடித்து, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம் என்றார்.

Advertisement