கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

1

கோவை: கூலி உயர்வு வேண்டி கடந்த 33 நாட்களாக, கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பூபதி பேசியதாவது: கடந்த 33 நாட்களாக கூலி உயர்வு வேண்டி நடந்து வந்த கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவினாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளில் இருந்த ஒன்றே கால் லட்சம் விசைத்தறிகளுக்கும் நியாயமான புதிய கூலி உயர்வு வேண்டி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.


இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இரு மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் மற்றும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதமும், பல்லடம், அவினாசி உள்ளிட்ட இதர ரகங்களுக்கு 10 சதவீதம் என்று கூலி உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 ஒப்பந்தத்தில் இருந்து இந்த உயர்வு ஒதுக்கப்பட்டுள்ளது. பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உத்தரவாதத்துடன், எங்களின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். நாளை சங்கத்தின் பொதுக்குழு கூட்டி, 2 நாட்களில் விசைத்தறிகளை இயக்குவோம். இந்த 33 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலம் ரூ.1000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், "முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் ஒரு மாத காலம் நடந்து வந்த விசைத்தறி போராட்டம் முடிவடைய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்களும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது சுமூகமாக நடந்து முடிந்தது. போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.

Advertisement