கோலி, படிக்கல் அபாரம்; பெங்களூருக்கு 5வது வெற்றி

சண்டிகர்: பிரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 37வது லீக் போட்டி சண்டிகர் மைதானத்தில் நடந்தது.. இந்தப் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 33 ரன்னிலும் க்ருணல் பாண்டியாவிடம் அடுத்தடுத்து வீழ்ந்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 6 ரன்னிலும், வதேரா 5 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதனால், 76 ரன்னுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இங்கிலீஷ் மற்றும் ஷஷாங் சிங் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தது. இங்கிலீஷ் 29 ரன்னிலும், ஸ்டொயினிஸ் 1 ரன்னிலும் சுயாஷ் ஷர்மா வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அதன்பிறகு ஷஷாங் சிங், ஜான்சென் ஜோடி, பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர்.


இறுதியில், பஞ்சாப் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. ஷஷாங் சிங் 31 ரன்களும், ஜான்சென் 25 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணியை பொறுத்தவரையில் க்ருணல் பாண்டியா, சுயாஷ் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், ஷெபேர்டு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூருவுக்கு பில் சால்ட் 1 ரன்னில் முதல் ஓவரிலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு, கோலியுடன் இம்பேக்ட் வீரர் படிக்கல் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இருவரும் சேர்ந்து 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தொடர்ந்து, பட்டிதர் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தாலும், கடைசி வரை ஆட்டமிழக்காத கோலி பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 18.5 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார்.

மேலும், பிரீமியர் லீக் வரலாற்றில் 50 ரன்களுக்கும் கூடுதலான ஸ்கோரை அதிக முறை அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

Advertisement