வழக்குகள் வாயிலாக காங்கிரசை பா.ஜ., மிரட்டுகிறது: கார்கே

பக்சர்:பீஹாரில் உள்ள பக்சரில் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'நேஷனல் ஹெரால்டு' மற்றும் 'குவாமி அவாஸ்' பத்ரிகைகளை துவங்கினார். சுதந்திர போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் குரலை ஒருங்கிணைக்கவே இவை துவங்கப்பட்டன.
மறுபுறம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆங்கிலேயர்களின் முகவர்களாக இருந்தனர்; அவர்களுக்காகவே பணியாற்றினர். அதனாலேயே நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை சிக்க வைப்பதில் பா.ஜ., குறியாக உள்ளது.
சோனியா, ராகுல் போன்றோர் கட்சிக்கு முதுகெலும்பாக இருந்து பணியாற்றி வருவதால், அவர்கள் இந்த வழக்கில் சிக்க வைக்கப்படுகின்றனர். சி.பி.ஐ., அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை வாயிலாக இவர்கள் குறி வைக்கப்படுகின்றனர். இந்த புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்தே செயல்பட்டு வருகின்றன. மத்திய பா.ஜ., அரசின் துாண்டுதல் தான் இதற்கு காரணம்.
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இவைஇரண்டும், ஏழைகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு எதிரானவை. இவற்றை சேர்ந்தவர்களால், சமூகத்தின் முன்னேற்றத்துக்காக சிந்திக்க முடியாது. ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் சமூகத்தை பிரிப்பதே இவர்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.