முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுச்சேரி: நாதன் அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் பிறந்தநாளை முன்னிட்டு லாஸ்பேட்டை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, கீழ்புத்துப்பட்டில் பராசக்தி அம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கீழ்புத்துப்பட்டு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சாமிநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், பெத்துச் செட்டிப்பேட்டை சித்தி விநாயகர் கோவில், அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜையும், லாஸ்பேட்டை வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, லாஸ்பேட்டை தொகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில், 5 ஆயிரம் பேருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, மகளிர் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நாதன் அறக்கட்டளை நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பராசக்தி ஆன்மீக இயக்கத்தினர் செய்திருந்தனர்.