அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கூடாது; உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

9


பெய்ஜிங்: தங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிபராக பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப், மற்ற நாடுகள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு நிகராக பரஸ்பரம் அதே அளவுக்கு வரி விதிப்போம் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்தியா உள்பட பல நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியும், மாற்றியும் அமைத்தார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனால், அமெரிக்கா- சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், பெய்ஜிங்கிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக, உறுதியான மற்றும் பரஸ்பர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தப் போரை தீர்க்கும் நாடுகளுக்கு மதிப்பு கொடுப்போம் என்று கூறிய சீனா, அமெரிக்கா மட்டுமின்றி, எங்களை குறைத்து மதிப்பிடும் நாடுகளுடனும் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

தங்களிடம் வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு கோரும் நாடுகளிடம், சீனாவை தனிமைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Advertisement