அப்போ இனித்தது... இப்போ கசக்குதா? தி.மு.க.,வுக்கு இ.பி.எஸ்., கேள்வி

சென்னை: 'இது எங்களுடைய கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என்று சட்டசபையில் இருந்து வெளியே வந்த அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; சட்டசபையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் குடிநீரோடு கலந்து வந்த காரணத்தினால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் அதனை குடித்துள்ளனர். இதனால், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
15 நாட்களாக இந்த கழிவுநீர் கலந்த குடிநீரைத் தான் அந்த மக்கள் குடித்து வந்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடமும் கூறியுள்ளனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணத்தினால், 4 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்று அமைச்சர் கூறினார். மாநகராட்சிக்கு அருகில் நடந்த சித்திரை திருவிழாவில் வழங்கப்பட்ட உணவு, குளிர்பானம், மோர் உள்ளிட்டவற்றை சாப்பிட்டதன் காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழாவில் உறையூர் பகுதி மக்கள் மட்டும் தான் கலந்து கொண்டார்களா? பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு எல்லாம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை இந்த அரசு மறைத்து தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதேபோல, கடந்த 2024ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தை அடுத்த மலைமேடு பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்ததை குடித்ததில், 3 பேர் உயிரிழந்தனர். அப்போதும், அந்தப் பகுதி அமைச்சர் இதே கருத்தை தான் சொன்னார். வேண்டுமென்றே இந்த அரசாங்கம் ஆட்சியில் நடந்த சம்பவங்களை மறைப்பதை கொள்கையாக வைத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
எங்களைப் பொறுத்தவரையில் கழிவுநீர் குடிநீரோடு கலந்து வந்ததை குடித்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.,வும், காங்கிரசும் தான். அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தது அ.தி.மு.க., எங்கள் ஆட்சியில் வேறு வழியில்லாமல் கொண்டு வரப்பட்டது. 2010ல் நீட் தேர்வை கொண்டு வரும் போதே ரத்து செய்திருக்கலாம். இதனை செய்திருந்ததால், இத்தனை உயிர்களை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முழு முழு காரணம், தி.மு.க., தான்.
எப்போது பார்த்தாலும், தி.மு.க., மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி என்று அறிக்கை விடுகிறார்கள். இன்று முதல்வரே துடிதுடிக்க பேசுகிறார். நாங்கள் கூட்டணி வைத்தால், நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். ஏன் கோபப்படுகிறீர்கள். நீங்க ஏன் பயப்படுகிறீர்கள்.
இது எங்களுடைய கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பலம் வாய்ந்த கூட்டணியை அமைப்போம். முதல்வருக்கு பயம் வந்து விட்டது. முதல்வர் பதற்றப்படுவதை சட்டசபையில் பார்த்தேன். தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.
ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல என்று 1999ல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி பேசியுள்ளார். பா.ஜ.,வுடன் தி.மு.க., இணைந்து பணியாற்றிய போது இனித்தது. இப்போது கசக்குதா? 1999ல் தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருந்த போது, தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர் ஒருவர் நோய் வாய்பட்டார். அவரை ஒரு வருடம் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தது. அப்போது, பா.ஜ., கட்சி நல்ல கட்சியாக தெரிந்தது. இப்போது, கூட்டணி வைத்தால் ஏன் வைக்கிறீர்கள்? என்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது: பிரதமர் மோடி பேச்சு
-
விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை
-
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா
-
மின்வாரிய ஊழியர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்காதது ஏன்; அண்ணாமலை கேள்வி
-
புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவுறுத்தல்
-
டாஸ்மாக் வழக்கு: ஏப்.,23ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு