'லைக் போட்டதற்காக வழக்கு போட முடியாது'

2

பிரயாக்ராஜ்: 'சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுக்கு, 'லைக்' போடுவது என்பது, அதை, 'ஷேர்' செய்ததற்கு சமம் ஆகாது. எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு போட முடியாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் கலெக்டர் அலுவலகம் அருகே முஸ்லிம்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுப்பது தொடர்பாக, சவுத்ரி பர்ஹான் உஸ்மான் என்பவர் சமூக வலைதள பதிவு வெளியிட்டு இருந்தார்.

இந்த பதிவுக்கு, ஆக்ராவைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர், 'லைக்' எனப்படும் விருப்பக்குறியிட்டார்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த, 600 - 700 பேரை அனுமதியின்றி போராட்டம் நடத்த திரட்டியதாகவும், அதற்காக சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதில், 'சமூக வலைதள பதிவுகளுக்கு லைக் இடுவது, அந்த பதிவை வெளியிட்டதற்கோ, 'ஷேர்' செய்ததற்கோ சமம் அல்ல. எனவே, லைக் இடுபவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய முடியாது' என, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Advertisement