கிராம உடையில் 'போட்டோ சூட்' ஜோடிக்கு குவியும் பாராட்டு

யாத்கிர்: திருமணத்துக்கு முந்தைய 'போட்டோ சூட்'டில், ஆடு மேய்ப்பவர்கள் போன்று ஆணும், பெண்ணும் எடுத்துக் கொண்ட புகைப்படம், சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

திருமணம் நிச்சயிக்கப்படும் ஜோடிகளின் புகைப்படங்கள், திருமணத்துக்கு முன்னரே போட்டோ சூட் எடுக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. சிலர் ஆபத்தான முறையில் நீர் நிலைகளில், ரயில் தண்டவாளத்தில் போட்டோ சூட் நடத்துகின்றனர்.

இந்நிலையில், யாத்கிர் மாவட்டம், வடகேராவின் குமனுார் கிராமத்தை சேர்ந்த குபேந்திராவுக்கும், வடகேரா டவுனை சேர்ந்த ஸ்ரீதேவிக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களும் திருமணத்துக்கு முந்தைய புகைப்படம் எடுக்க விரும்பினர். ஆனால், மற்றவர்களை போன்று ஆடம்பர உடை அணிந்து, பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பவில்லை.

மாறாக தங்கள் கிராமத்திலேயே நடத்த முடிவு செய்தனர். குபேந்திரா, ஆடு மேய்ப்பவர் போன்று வேஷ்டி, சட்டையுடன், தோளில் கருப்பு சால்வை போட்டு கொண்டு, தலையில் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து கொண்டார். ஸ்ரீதேவி, பச்சை நிற சேலை அணிந்து கொண்டிருந்தார்.

இவ்விருவரின் புகைப்படங்களும் கலாசாரம், பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றன.

Advertisement