மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்

8


கோவை: மானியம் பெற்றுத்தர கைத்தறி நெசவாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக, கூட்டுறவு சங்க மேலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து, ரூ.15.89 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை, சூலுார் வதம்பச்சேரி கூட்டுறவு சங்க மேலாளராக இருப்பவர் சவுண்டப்பன், 54. இவர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அரசிடம் இருந்து மானியம் பெற்றுத் தந்து வந்தார். அவ்வாறு மானியம் பெற்றுத்தர அவர் லஞ்சம் பெற்றுள்ளார்.


இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை, அவர் பணிபுரியும் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.


சோதனையின் போது, சவுண்டப்பன் அலுவலகத்தில் இருந்தார். சோதனையில், சவுண்டப்பனிடம் கணக்கில் வராத, 15 லட்சத்து, 89 ஆயிரத்து, 950 ரூபாய் லஞ்சப்பணம் இருந்தது. இதை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் அவரிடம் இருந்தது கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து பெற்ற லஞ்சப்பணம் எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement