கோபுரத்தின் சுவர்களில் காவியங்கள் பொறிக்கப்பட்ட பாலகிருஷ்ணா கோவில்

ஹிந்து மதத்தில் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் போற்றப்படுகிறார். மஹாபாரதம், பகவத் கீதை உள்ளிட்ட புனித நுால்களிலும் கிருஷ்ணரை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

அன்பு, இரக்கம், பேரார்வம் ஆகியவற்றின் கடவுளாகவும், விளையாட்டு, புத்திசாலித்தனத்தின் உருவமாகவும் பார்க்கப்படுகிறார்.

சிறு வயது கிருஷ்ணர் வெண்ணெயை சாப்பிடும் அழகு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

கிருஷ்ணரை உச்ச கடவுளாக வழிபடுவோர் வீட்டில், கிருஷ்ணரின் சிறு வயது சேட்டைகள் அடங்கிய புகைப்படங்கள் கண்டிப்பாக இருக்கும். குழந்தை வடிவமான பாலகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலை பற்றி பார்ப்போம்.

கர்நாடகாவின் வட மாவட்டமான பல்லாரியின் ஹம்பியில் உள்ளது பாலகிருஷ்ணா கோவில். இக்கோவில் குழந்தை வடிவ பாலகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மரியாதை



விஜய நகர பேரரசுகள் ஆட்சியின் காலத்தில் கிருஷ்ண தேவராயர், கி.பி., 1513ல் கோவிலை கட்டினார்.

உத்கல போரில் வெற்றி பெற்றதற்கும், உதயகிரியின் கிழக்கு ஆட்சியை இணைத்ததற்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த கோவில் கட்டப்பட்டது.

கோவிலின் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகள், கட்டட கலை பிரமிப்பாக உள்ளது.

இந்தக் கோவிலின் முக்கிய சிலை தற்போது சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவில் கோபுரத்தின் சுவர்களில் காவியங்கள் பொறிக்கப்பட்ட அரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

கிழக்கு கோபுரத்தின் மேற்கட்டமைப்பில் உள்ள பகுதியில் கேடயங்கள், குதிரைகள், யானைகளுடன் கூடிய போர் வீரர்களின் நேர்த்தியான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலின் பக்கவாட்டில் அழகாக செதுக்கப்பட்ட விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்கள் உள்ளன.

கிருஷ்ணா பஜார்



கோவிலின் மேற்கு பகுதியை நோக்கி நடந்து சென்றால் முன்பு தானிய கிடங்காக பயன்படுத்தப்பட்ட கட்டடங்களை காண முடியும்.

அந்த கிடங்கிற்கு பின்பக்கம் படிக்கட்டு பாதைகள் உள்ளன அதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்று கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்து ரசிக்கலாம். கோவில் அமைந்திருக்கும் இடத்தை 'கிருஷ்ணா பஜார்' என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் எதுவும் கிடையாது.

கோவில் வளாகத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த கோவிலில் இருந்து சிறிது துாரத்தில் பிரசித்தி பெற்ற விருபாக் ஷா கோவிலும் உள்ளது.


எவ்வளவு துாரம்?

பெங்களூரில் இருந்து ஹம்பி 343 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பல்லாரி, விஜயநகரா, ஹம்பிக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்வோர் பல்லாரி, ஹொஸ்பேட் ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.



- -நமது நிருபர் -

Advertisement