சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்

7


சென்னை: ''சட்டசபையில், இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்டதை ஜனநாயக படுகொலையாக தான் பார்க்கிறோம்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.


டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி, சட்டசபையில் விவாதம் நடத்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: மானிய கோரிக்கை விவாதத்தில் பேசுபவர்கள் பெயரை எதிர்க்கட்சியிடம் கேட்டு உள்ளோம்.


Tamil News
நீங்கள் 2 பேர் பெயரை கொடுத்துள்ளீர்கள். அ.தி.மு.க., உறுப்பினர்கள் 2 பேர் இன்று விவாதத்தில் பேச இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

வெளிநடப்பு



சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:
சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மக்கள் பிரச்னையை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் பேச அனுமதி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக சபாநாயகர் மறுத்துவிட்டார்.



டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும். டாஸ்மாக்கில் நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்வதால், ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடக்கிறது. மக்களுடைய பிரச்னையை பேசுவதற்கு தான் சட்டசபை.

ஜனநாயக படுகொலை




பிரதான எதிர்க்கட்சியான நாங்கள், மக்கள் பிரச்னை, நாட்டில் நடக்கும் ஊழல் குறித்து சட்டசபையில் முறையாக சொல்வது எங்களுடைய கடமை. இதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்டதை ஜனநாயக படுகொலையாக தான் பார்க்கிறோம்.


சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை. துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, 10 நிமிடத்தில் எப்படி பேசி முடிக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!



தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''பா.ம.க., உறுப்பினர்கள் கூடத்தான் என்னை சந்தித்துப் பேசுகிறார்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

Advertisement