மூன்றாவது மொழி கற்காததால் தெய்வீக பண்பாடு, கலாசாரம் வெளியே போகவில்லை

தேவகோட்டை: தேவகோட்டை பிரவசன சபா சார்பில் நகர சிவன் கோயிலில் பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு நிகழ்வு நடந்தது. தலைவர் ஜமீன்தார் சோமநாராயணன் தலைமை வகித்தார். வக்கீல் சிவராமன் வரவேற்றார்.

பெரியபுராணம் சிவ தொண்டர் காரைக்கால் அம்மையார் குறித்து சகடபுரம் வித்யா பீட ஆஸ்தான வித்வான் சீனிவாசன் பேசியதாவது:

கம்பராமாயணம், மகா பாரதம் போல் பெரியபுராணத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். நமது தமிழ் மொழியில், தெய்வீகம், பண்பாடு கலாசாரம் , பல காலம் போற்றுதலுக்குரியது. ஆனால் சில காலமாக மூன்றாவது மொழியை நாம் கற்காததால் நம்முடைய கலை பண்பாடு செல்வங்களை வெளியே கொண்டு சென்று பரப்ப முடியவில்லை. நம்முடைய புராணங்களை உலகில் பல மொழிகளில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பக்தி தொண்டை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சிவனடியார்கள் 63 பேரில் ஏற்ற தாழ்வு இல்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்து மதத்தில் எந்த வித இன வேறுபாடு இன்றி அனைத்து இனத்தினரும் சமமாக 63 பேரும் சிவனடியார்களாக ஏற்கப்பட்டு கோவில்களில் அனைவரும் வீற்றிருக்கின்றனர்.

பல தானங்களை செய்த கர்ணன் சொர்க்கத்தில் பசியோடு இருந்தார். அப்போது அங்கு வந்தவரிடம் செய்த தான தர்மத்தை சொல்லி உணவு கேட்டதில் கர்ணன் அன்னதானம் செய்யவில்லை என காரணம் கூறினார். காரைக்கால் அம்மையார் புராணத்தை பொறுத்தவரை அன்னதானமே முதல் பணியாக உள்ளது.

இறைவனின் அருளில் மாங்கனி பெற்றதை அறிந்து கணவர் பிரிந்து சென்றதை அறிந்து காரைக்கால் அம்மையார் தனது உருவத்தை பேயாக மாற்றி வேண்டினார். அதன்படியே உருவம் மாறி இறைவனிடம் சென்ற போது காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் அம்மா என்று அழைத்தார். எப்போது பாடிக்கொண்டே இருக்கும் அருளை பெற்றார்.

மூன்றாம் நூற்றாண்டில் பாடியதை 21ம் நூற்றாண்டில் நாம் பாடிக் கொண்டு இருக்கிறோம். மனம் உருகி சிவாயநம சொல்ல வேண்டும். இறைவனிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

Advertisement