கிடப்பில் சுகாதார வளாகம் கட்டுமான பணி

திருப்புவனம்: திருப்புவனத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கியும் இன்று வரை கட்டப்படாததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திருப்புவனம் தினசரிமார்க்கெட் வீதியில் ஆண், பெண் கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கழிப்பறை கட்டடம் சேதமடைந்ததால் அதனை இடித்து அகற்றி விட்டு புதிய சுகாதார வளாகம் கட்ட 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. இரண்டு வருடங்களாக கழிப்பறை கட்டப்படவே இல்லை.

திருப்புவனம் திதி பொட்டலில் திதி, தர்ப்பணம் வழங்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 173 கிராம மக்கள் மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம் செல்ல திருப்புவனம் வந்து செல்கின்றனர்.

அவசரத்திற்கு கழிப்பறை இல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பயணிகள் இயற்கை உபாதைக்காக வைகை ஆற்றிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முத்துராஜா என்பவர் பேரூராட்சிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் விரைவில் கழிப்பறை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பேரூராட்சி செயல் அலுவலர் பதில் அளித்துள்ளார்.

ஆனால் கழிப்பறை இருந்த இடத்தில் அம்ரூத்2.0 திட்டத்தின் கீழ் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. மார்க்கெட் வீதியில் கழிப்பறை கட்ட பொது இடம் எதுவும் இல்லாத நிலையில் கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் விரைவில் திருப்புவனத்தில் புதிய சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement