காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி; 8 பேர் காயம்

13

ஸ்ரீநகர்: சுற்றுலா தலமான காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.



ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


அந்த இடத்திற்கு விரைந்துள்ள பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர்.


காஷ்மீருக்கு தற்போது தான் அதிகம் பேர் சுற்றுலா வருவார்கள். இதனால், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இதனை கெடுக்க முயற்சிக்கின்றனர்.



பாகிஸ்தான் ராணுவத் தலைவர் இந்தியாவும், பாகிஸ்தானும் முற்றிலும் வேறுபட்டவை என்று கூறியதைத் தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கண்டனம்



இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆலோசனை



இத்தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும், சவுதியில் இருக்கும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.



மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், அமித் ஷாவை சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமித் ஷா உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். டி.ஜி.பி., உட்பட ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகள், மெய்நிகர் வழியில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Advertisement