மேம்பாட்டு திட்ட பணிகளை கண்காணிப்பதில்...சுணக்கம் திருவள்ளூரில் 7 அதிகாரிகள் பணியிடங்கள் காலி

திருவள்ளூர் திருவள்ளூர் நகராட்சியில் இரண்டு மாதங்களாக கமிஷனர் பணியிடம் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. மேலும், நகராட்சி பொறியாளர், நகரமைப்பு அலுவலர்மற்றும், நான்கு சுகாதார ஆய்வாளர் பணிகளும் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், நகராட்சி மேம்பாட்டு பணியை கண்காணிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
முதல் நகராட்சி நிலையில் இருந்த திருவள்ளூர், கடந்த 2023ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்ந்ததால், நகராட்சிக்கு இதுவரை இருந்த நகரமைப்பு ஆய்வாளர் பணிக்கு மேல்நிலை அலுவலராக, நகரமைப்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.
ஆனால், தரம் உயர்த்தப்பட்டு இரு ஆண்டுகளாகியும், தற்போது வரை அப்பணியிடத்தில் யாரும் நியமிக்கப்படாமல் காலியாகவே உள்ளது. தற்போதும், நகரமைப்பு ஆய்வாளர் தான், நகரில் வீடு கட்டுவோருக்கு கட்டட உரிமை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆறு மாதங்களுக்கும் மேலாக நகராட்சி பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. தற்போது, நகராட்சி பகுதியில், புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணி, 33 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. 10.48 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, நன்னீராக மாற்றும் திட்டமும் நடந்து வருகிறது.
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகில், 50 சென்ட் இடத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நகராட்சி மேல்நிலைப் பள்ளி கட்டட பணியும் நடந்து வருகிறது. மேலும், பல்வேறு கட்டட பணிகளை மேற்பார்வையிட்டு கண்காணிக்க வேண்டிய பொறியாளர் பணியில் இல்லை. உதவி பொறியாளர் மட்டுமே கூடுதல் பணியை கவனித்து வருகிறார்.
அதேபோல், தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், துப்புரவு பணியை மேற்பார்வை செய்யும் ஆய்வாளர்கள் எண்ணிக்கை, மூன்றில் இருந்து நான்காக உயர்த்தப்பட்டது. ஆனால், மூன்று மாதத்திற்கு முன் வரை, ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வந்தார். ஆனால், அவரும் மூன்று மாதத்திற்கு முன் உடல்நலக்குறைவால் மரணடைந்தார்.
அன்றிலிருந்து இதுவரை அந்த பணியிடம் உள்ளிட்ட, நான்கு சுகாதார ஆய்வாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால், அவர்களின் பணியையும் சேர்த்து, சுகாதார அலுவலர் ஒருவரே செய்து வருகிறார்.
அத்துடன், அவரது வழக்கமான பணியையும் கூடுதல் பணிச்சுமையுடன் செய்து வருகிறார். தற்போது, நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும், தனியார் நிறுவனம் வாயிலாக குப்பை அகற்றப்பட்டு வருகிறது.
நகராட்சி துப்புரவு ஊழியர்கள், கழிவுநீர் அகற்றம், சுகாதார வளாகம் சீரமைப்பு போன்ற பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தனியார் நிறுவனம் நியமித்த ஊழியர்களின் பணியை கண்காணித்து, முறையாக வேலை வாங்குவது நகராட்சி சுகாதார ஆய்வாளர்களின் பணி.
ஆனால், அப்பணியிடம் காலியாக உள்ளதால், தனியார் துப்புரவு ஊழியர்கள் முறையாக பணி செய்யாமல், ஒப்பந்தத்தை மீறி, நகராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை, ஆங்காங்கே தீ வைத்து எரித்து வருகின்றனர்.
அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து, முறையாக கண்காணித்து மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பது நகராட்சி கமிஷனர் தான். கடந்த பிப்., மாதம் இறுதியில், நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த திருநாவுக்கரசு ஓய்வு பெற்றார்.
அவர் ஓய்வு பெற்று இரண்டு மாதங்களாகியும், புதிய கமிஷனர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது, திருவேற்காடு நகராட்சி கமிஷனர், கூடுதல் பொறுப்பாக திருவள்ளூரை கவனித்து வருகிறார். தற்போது, வரி வசூல் காலம் என்பதால், அவராலும், இரண்டு நகராட்சிகளை பராமரிக்க இயலாமல் சிரமப்படுகிறார்.
திருவள்ளூர் நகராட்சியில் முக்கிய பணிகளை நிறைவேற்ற வேண்டிய நகராட்சி கமிஷனர், பொறியாளர், நகரமைப்பு அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் என, ஏழு பிரதான அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளையும், அடிப்படை தேவைகளையும் கண்காணித்து, அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாக ஆணையர், திருவள்ளூரில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நலத்திட்ட பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்,
திருவள்ளூர்.