25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலை

சென்னை:“நடப்பாண்டு, 100 விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பில், 25 இடங்கள் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஒதுக்கப்படும்,” என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

சட்டசபையில் அவர் அளித்த பதில்:

மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, அறிவித்து இருந்தேன். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசு துறைகளிலும், 104 வீரர்களுக்கு, கடந்தாண்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு, 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த, 3 சதவீத இடஒதுக்கீட்டில், காவல் துறையில் பணியாற்றுவதற்கும் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கொடுத்த 104 பேருக்கான வேலையில், 11 வீரர்களுக்கு காவல் துறையில், 'கான்ஸ்டபிள்' பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையில், 32 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பங்களை கேட்டுள்ளது. விரைவில், இரண்டாம் நிலை காவலர் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்படும். விளையாட்டு துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிப்பதற்கு, அரசு துணை நிற்கும்.

மாற்றுத்திறனாளி வீரர்கள் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே, பயிற்சி கட்டணம், பயண கட்டணம் போன்றவை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை வாயிலாக வழங்கப்படுகின்றன. இதுவரை, 198 பாரா விளையாட்டு வீரர்களுக்கு மட்டும், 4.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்று வெற்றி பெற்ற பின், 196 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு, மற்ற வீரர்களுக்கு இணையாக, 27 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, ஐந்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, 100 விளையாட்டு வீரர்களில், 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு, அரசு மற்றும் பொதுத் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement