புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் காண்பதில் மெத்தனம்: விழிக்குமா சுற்றுலாத்துறை

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு பராமரிப்பதில் சுற்றுலாத்துறை மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது.

சர்வதேச சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் உள்ள நிலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் இங்குள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை மட்டும் கண்டு ரசித்து வருகின்றனர். கோடை சீசன் தருணங்களில் ஒரே இடங்களில் இவர்கள் குவிவதால் போக்குவரத்து நெரிசல், அடிப்படை கட்டமைப்புகள் இன்றி சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் அவதியடையும் நிலையை காண முடிகிறது.இதற்கு மாற்றாக 10 ஆண்டுகளுக்கு முன் புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்தி சுற்றுலா பயணிகள் இடம்பெயரும் வகையில் அவற்றை புதுப்பொலிவுடன் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தது.

இதில் தாண்டிக்குடி கீழ்மலை பகுதியில் உள்ள தடியன்குடிசை நறுமணச் சுற்றுலா தலம் உருவாக்கப்பட்டு அதற்கான பயணிகள் தங்கும் விடுதி ஏற்படுத்தப்பட்டன. இங்குள்ள சுற்றுலாத்தலங்களும் பிரபலப்படுத்த அப்போதைய கலெக்டர் வாசுகி தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஆன்மிக சுற்றுலா தலங்களாக தாண்டிக்குடி பாலமுருகன் கோயில், வில்பட்டி வெற்றிவேலப்பர்,பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்கள் அடங்கின. தாண்டிக்குடி புல்லாவெளி அருவி,கிளாவரை புலவிச்சாறு அருவி, பேத்துப்பாறை ஐந்தருவி இருந்தது. தொடர்ந்து மலைப்பகுதி முழுமையும் உள்ள தொல்லியல் சின்னங்கள் குறித்த சுற்றுலா, கிராமிய சுற்றுலா ஆகியவற்றிற்கு வழிகாட்டிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இச்சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செவி வழி தகவலின்படி தற்போது வரை சென்று வருகின்றனர்.

சுற்றுலாத்துறையோ இச்சுற்றுலா தலங்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் கிடப்பில் விட்டுள்ளது. சீசனின் போது அதிகரிக்கும் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய சுற்றுலா தலங்கள் அமையும் நிலையில் பயணிகள் அங்கு செல்வர். மேலும் 5 ஆண்டுகளுக்கு மேல் வனத்துறை கரடிச்சோலை, மயிலாடும்பாறை இயற்கை எழில் காணும் உயர்கோபுர பகுதி மூடப்பட்டுள்ளது. இவை பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாவின் வழிகாட்டியாக உள்ள சுற்றுலாத்துறையோ செயல்பாடின்றி ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளது. சுற்றுலாத்துறை விழிக்கும் பட்சத்தில் சுற்றுலா மேம்படும்.

Advertisement