சாம்சங் விவகாரத்தில் அரசின் அலட்சியம்; 'டெஸ்லா' முதலீட்டை ஈர்ப்பதில் சறுக்கல்

1

சென்னை: தமிழகத்தில் அமைந்துள்ள 'சாம்சங் தொழிற்சாலையில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. அங்கு பணியாளர்கள், நிர்வாகம் இடையில் நிரந்தரமாக சுமூக தீர்வு ஏற்பட, தமிழக அரசின் தொழில் துறை தரப்பில் இருந்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டப்படுகிறது.

இதனால், அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க்கின், 'டெஸ்லா' நிறுவனத்தின் மின்சார கார் தயாரிப்பு ஆலையின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தகவல் திரட்டல்



இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது: சாம்சங் விவகாரத்தில் சுமூகமான தீர்வு கிடைக்க, அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆலையில் அடிக்கடி போராட்டம் நடப்பதும், அதை அரசு கண்டும் காணாமல் இருப்பதும் சரியல்ல.

இதேபோல், மற்ற ஆலைகளிலும் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டால், புதிதாக முதலீடுகள் செய்ய முன்வரமாட்டார்கள்.

'டெஸ்லா' நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்காக ஏஜென்சிகள் வாயிலாக, திறன் வாய்ந்த பணியாளர்கள், ஏற்றுமதிக்கான வசதி வாய்ப்பு, எளிதாக தொழில் துவங்கும் சூழல் போன்றவற்றின் அடிப்படையில், தங்களுக்கு ஏற்ற மாநிலத்தை தேர்வு செய்வதற்கான தகவல்களை திரட்டி வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் முதலீட்டை ஈர்ப்பதில் மஹாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், குஜராத் ஆகியவற்றுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எலான் மஸ்க் விரைவில் இந்தியா வர உள்ளார். அவரை, தங்கள் மாநிலத்திற்கு அழைக்க, அந்நிறுவன பிரதிநிதிகளுடன், பல மாநில அரசுகளும் பேச்சு நடத்தி வருகின்றன.

நம்பிக்கை



இந்த சூழலில், சாம்சங் நிறுவனத்தின் பணியாளர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், டெஸ்லாவின் முதலீடு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சாம்சங் விவகாரத்தில் இனியும் அரசு அலட்சியம் காட்டாமல், பணியார்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், அரசின் மீது தொழில் துறையினரிடம் நம்பிக்கை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement