காஷ்மீர் தாக்குதல் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு; உளவுத்துறை தகவல்

13

ஸ்ரீநகர்: காஷ்மீர் தாக்குதலுக்கு எல்லா திட்டத்தையும் தயார் செய்தவன் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய பயங்கரவாதியான சைபுல்லா கசூரி என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த நிலையில் தாக்குல் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் மைண்ட் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து உளவுத்துறை வட்டாரம் கூறியது:

குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தாய்பா அமைப்பின் கிளைப்பிரிவாகவே தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் செயல்படுகிறது. 2019ல் இருந்து காஷ்மீரில் நடக்கும் பல முக்கிய தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று வருகிறது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் டாக்டர் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

அந்த தாக்குதலுக்கு பிறகு இப்போது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள், உள்ளூர் பயங்கரவாதிகள் என இந்த தாக்குதலில் மொத்தம் 6 பேர் வரை நேரடியாக ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

சிலர் போலீஸ், ராணுவ உடையில் இருந்துள்ளனர். சிலர் உள்ளூர் மக்கள் போல உடை அணிந்து வந்து இருக்கின்றனர். ஏ.கே., 47 போன்ற சக்தி வாய்ந்த துப்பாக்கிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினர். தலை மற்றும் உடையில் கேமரா பொருத்தி இருந்தனர்.

தாங்கள் நடத்திய கொடூர தாக்குதலையும், அப்பாவி மக்கள் செத்து விழுவதையும் அந்த கேமரா மூலம் வீடியோ எடுத்து இருக்கின்றனர். பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியை பயங்கரவாதிகள் தேர்வு செய்ததற்கும் பல முக்கிய காரணம் உள்ளது.

சம்பவத்தின் போது, சுற்றுலா பயணிகளை மட்டுமே தேர்வு செய்து சுட்டு இருக்கின்றனர். குறிப்பாக ஹிந்துக்களையும், ஆண்களையும் மட்டுமே குறி வைத்து கொலை செய்தனர்.
இந்த தாக்குதல் முன்கூட்டியே பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கிறது.
எல்லா திட்டத்தையும் தயார் செய்தவன் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய பயங்கரவாதியான சைபுல்லா கசூரி.

இவனை சைபுல்லா காலித் என்றும் அழைக்கின்றனர். இவன் தான் பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய திட்டம் வகுத்துள்ளான். இப்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இருக்கிறான். மும்பை தாக்குதல் மூளையாக இருந்த லஷ்கர் இ தாய்பா இணை நிறுவன தலைவனான ஹபீஸ் சயீத்தின் நெருங்கி கூட்டாளியாகவும் சைபுல்லா இருக்கிறான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

லஷ்கர் இ தொய்பாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகப்பெரிய ஆப்ரேஷனை நடந்த இந்தியா தயார் ஆகி வருவதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement