இதுபோன்ற வன்முறைகளுக்கு இடம் கிடையாது; பஹல்காம் தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் கண்டனம்

26

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.


விராட் கோலி; பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைதியும், தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.


கே.எல்.ராகுல்; காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றியே என்னுடைய எண்ணம் உள்ளது. அமைதி மற்றும் வலிமை பெற பிரார்த்திக்கிறேன்.


சுப்மன் கில்;பஹல்காம் தாக்குதலை கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன். நாட்டில் இதுபோன்ற வன்முறைக்கு நாட்டில் இடம் கிடையாது.


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.

அதேபோல, இந்திய சினிமா பிரபலங்களும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, அனுபம் கெர், கரீனா கபூர், விக்கி கவுசல், சித்தார்த் மல்ஹோத்ரா, சஞ்சய் தத், ரவீனா டன்டன், நானி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement