பஹல்காம் தாக்குதலில் கதறிய சுற்றுலா பயணிகள்: நம்பிக்கை ஊட்டிய ராணுவ வீரரின் வைரல் வீடியோ

ஸ்ரீநகர்; பயப்படாதீர்கள், நாங்கள் இந்திய ராணுவத்தினர் தான் என்று பஹல்காம் தாக்குதலால் நிலைகுலைந்த சுற்றுலா பயணிகளிடம் ராணுவ வீரர் ஒருவர் பேசி நம்பிக்கை ஊட்டும் வீடியோ வைரலாகி உள்ளது.
காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் இந்த செயலுக்கு உலகம் எங்கிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவத்தின் போது அங்கு பீதியில் இருந்த சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தினர் பயப்பட வேண்டாம், நாங்கள் இந்திய ராணுவத்தினர் தாம் என்று பேசும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
அந்த வீடியோவில், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட போது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சுற்றுலா பயணிகள் அச்சத்தின் உச்சத்தில் இருந்துள்ளனர். அதிர்ச்சியில் கதறி அழுத அவர்களை அங்கே வந்த இந்திய ராணுவ வீரர் ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்.
அவரின் உடையை பார்த்து அங்கே இருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் பயந்து கதறி இருக்கிறார். என் குழந்தையை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று கண்ணீர் விட, அவர்களை ராணுவ வீரர் அமைதிப்படுத்தி உள்ளார்.
நாங்கள் ராணுவத்தினர். உங்களை காப்பாற்றவே வந்திருக்கிறோம் என்று கூறிய பின்னரே, வந்திருப்பது இந்திய ராணுவத்தினர் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
அங்கே இருந்த ஒரு சிறுவன், தமது அப்பாவை கதறியபடியே அழைக்க, அவரையும் ராணுவ வீரர் ஆசுவாசப்படுத்தி தைரியமூட்டுகிறார். பின்னர் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் வழங்கியும், எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் விளக்கி கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டும் வருகிறது.






