பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணைநிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை நிற்கும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் மிக கொடூரமான தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள்.
சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட தகவல், அதிர்ச்சியையும், துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீரில் மிக பிரபலமான சுற்றுலா தளமான பஹல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்பாவி மக்கள் மீது இது போன்று நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.அங்கு மோசமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகள், பங்கரவாதிகள் எத்தைகைய எண்ணம் கொண்டவராக இருந்தாலும், அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் எனக்கு கிடைத்த உடன், டில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மையம் செயல்படுவதற்கு உத்தரவிட்டு இருக்கிறேன். பயங்கரவாத தாக்குதல் நடக்க இந்திய மண்ணில் இடமில்லை. இந்த தாக்குதல்களை தடுத்து ஆக வேண்டும். எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நடவடிக்கையை எடுத்திட தமிழக அரசு துணை நிற்கும் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.










மேலும்
-
காஷ்மீரில் துயரத்தில் முடிந்த பிறந்த நாள்; எல்.ஐ.சி., அதிகாரி குடும்பம் வேதனை
-
பிரீமியர் லீக் போட்டி: ஐதராபாத் பேட்டிங்
-
காஷ்மீர் பயணத்திட்டத்தை மாற்றும் சுற்றுலா பயணிகள்: 90% முன்பதிவு ரத்து
-
பஹல்காம் தாக்குதல் : பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியது
-
மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் :கிருஷ்ணகிரி அருகே வணிக ஆய்வாளர் கைது
-
பஹல்காம் தாக்குதலில் கதறிய சுற்றுலா பயணிகள்: நம்பிக்கை ஊட்டிய ராணுவ வீரரின் வைரல் வீடியோ