வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே: முதல் டெஸ்டில் அசத்தல்

சில்ஹெட்: முதல் டெஸ்டில் அசத்திய ஜிம்பாப்வே அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 191, ஜிம்பாப்வே 273 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 194/4 ரன் எடுத்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டத்தில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (60), ஜாக்கர் அலி (58) கைகொடுக்க வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 255 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் சாய்த்தார்.
பின், 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (54), பென் கர்ரான் (44) நல்ல துவக்கம் தந்தனர். சீன் வில்லியம்ஸ் (9), கேப்டன் கிரேக் எர்வின் (10) நிலைக்கவில்லை. வெஸ்லி மாதேவரே (19*), வெலிங்டன் மசகட்சா (12) ஆறுதல் தந்தனர். ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.


ஆட்ட நாயகன் விருதை ஜிம்பாப்வே வீரர் முசரபானி (9 விக்கெட்) வென்றார். ஜிம்பாப்வே அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் ஏப். 28ல் சாட்டோகிராமில் துவங்குகிறது.

Advertisement